IND vs AFG: 26 வயது வீரரை அணியில் சேர்த்தது சிறப்பான முடிவு.. கடைசி போட்டியில் கவனம் தேவை- கவாஸ்கர்
லக்னோ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் ப்ராரை அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவளித்த இந்தியஅணி நிர்வாகத்தை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 402 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியை 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி அசத்தியது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் ப்ரார், 60 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிரணியின் பேட்டிங் வரிசையைச் சரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.

குர்னூர் ப்ராரின் பந்துவீச்சை பாராட்டிய கவாஸ்கர்
இது குறித்து பேசிய கவாஸ்கர், "அவருடைய ரன்-அப் மற்றும் பந்துவீசும் விதம் Rhythm மிகச் சிறப்பாக உள்ளது. பந்தை பவுன்ஸ் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். குறிப்பாக குர்பாஸை அவர் வீழ்த்திய விதம் அபாரமானது. அவரது பவுன்சர் பேட்ஸ்மேனைத் துரத்திச் சென்று தாக்கியது. மிகவும் துல்லியமாக வீசுகிறார். பேட்ஸ்மேன் எங்கு பந்து வரக்கூடாது என்று நினைக்கிறாரோ, அங்கேயே துல்லியமாக வீசுகிறார்" என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், புள்ளிவிவரங்களைக் கடந்து குர்னூர் ப்ராரின் திறமையைக் கண்டறிந்த தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தேர்வு வாரியத்திற்கு கவாஸ்கர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்."தேர்வுக்குழு அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது. அவருடைய புள்ளிவிவரங்களையோ அல்லது இந்தியா ஏ போட்டிகளின் செயல்பாடுகளையோ நீங்கள் பார்த்தால், அவை சுமாராகவே இருக்கும்.
இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அவை அசத்தலாக இல்லை. இருப்பினும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அவரிடம் ஏதோ ஒரு திறமையைக் கண்டு தேர்வைச் செய்துள்ளது. அதேபோல், அணி நிர்வாகமும் அவருக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது, இது மிகவும் முக்கியமானது" என்று கவாஸ்கர் கூறினார்.
கேப்டன் ஷுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம்
கேப்டன் ஷுப்மன் கில்லின் சிறப்பான பேட்டிங் ஃபார்ம் குறித்தும், ஒரு வீரரின் தனிப்பட்ட செயல்பாடு அவரது கேப்டன்சி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் கவாஸ்கர் விளக்கினார்.இப்போட்டியில் கேப்டனாக முன்னின்று வழிநடத்திய ஷுப்மன் கில் 110 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்கள் விளாசி, அவருடன் இணைந்து 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதன் மூலம் இந்திய அணி 402 ரன்கள் குவித்தது.
"ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்கள் குவிக்காதபோது, களத்தில் உங்களது உள்ளுணர்வு கூறும் சில முக்கிய முடிவுகளை எடுக்க நீங்கள் தயங்குவீர்கள். ஒரு பந்துவீச்சாளரைத் தொடர்ந்து பந்துவீச வைப்பது அல்லது ஃபீல்டிங் வியூகங்களை மாற்றுவது போன்ற விஷயங்களில் உங்களது தனிப்பட்ட ஃபார்ம் சிறப்பாக இருக்கும்போதுதான் அந்த உள்ளுணர்வு வலுவாகச் செயல்படும்" என்று கவாஸ்கர் விளக்கினார்.
"ஆனால், நீங்கள் ரன் குவிக்க திணறும்போது, உங்களுக்கு உள்ளுணர்வு தோன்றினாலும் அந்த முடிவை எடுக்க தயங்குவீர்கள். ஏனெனில், அது தவறாகிவிடுமோ என்ற பயம் இருக்கும். மேலும் ஒரு வீரராக நீங்கள் சரியாக விளையாடாததால், உங்களது கேப்டன்சியும் விமர்சனத்திற்குள்ளாகும்" என்று அவர் கூறினார்.
சுழற்பந்து வீச்சு குறித்து கவாஸ்கர் கருத்து
சென்னையில் நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி குறித்துப் பேசிய கவாஸ்கர், தொடரை வென்றபோதிலும் சுழற்பந்து வீச்சு துறையில் இந்திய அணி நிர்வாகத்திற்கு இன்னும் தெளிவு தேவை என்று நம்புகிறார்.
"கடைசிப் போட்டியில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று நினைக்கிறேன். இந்திய அணி சுழற்பந்து வீச்சு பிரிவில் சில கேள்விகளுக்கு விடை காண முயலும். குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசினாலும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஹர்ஷ் துபே முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும், சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்" என்று கவாஸ்கர் குறிப்பிட்டார்.
"சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் மட்டுமல்லாமல், வரும் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி இந்தச் சுழற்பந்து வீச்சுப் பிரச்சினைக்கு விடை தேட வேண்டியிருக்கும்" என்று கூறி கவாஸ்கர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


