ரிஷப் பண்ட்டுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள்.. முதலில் பதவி பறிப்பு.. அடுத்து இந்த புறக்கணிப்பு
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டிகொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பர டீசரில் ரிஷப் பண்ட்டின் முகம் இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டன் பொறுப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. இது ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பிய நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட டீசரில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் படங்கள் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றன.

இந்திய டெஸ்ட் அணியின் அடையாளமாகத் திகழ்ந்த பண்ட் இதில் புறக்கணிக்கப்பட்டது, அவர் 'போஸ்டர் பாய்' அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பெரிய அளவில் சோபிக்காததே இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. டெல்லி அணிக்காக விளையாடிய அவர் 12 போட்டிகளில் வெறும் 251 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவே அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓரம் கட்டப்பட முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
2025-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பண்ட் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த ஆண்டில் 7 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 629 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 48.38 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துத் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், "ரிஷப் பண்ட் ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரது இடத்திற்கு அணியில் எவ்வித பாதிப்பும் இல்லை. அவர் மீண்டும் பழையபடி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டுவார் என நம்புகிறோம்," என்றார்.
சுப்மன் கில் தலைமையில் இந்திய அணியின் தலைமைப் பொறுப்புகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அனுபவம் கருதி கே.எல். ராகுலுக்கு துணை கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராகக் கருதப்பட்ட பண்ட் விளம்பரங்களில் கூட புறக்கணிக்கப்படுவது ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
