ஒரே ஆண்டில் 7வது சதம்.. 24 வயதில் சாதனை படைக்கும் சுப்மன் கில்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சம்பவம்
இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 92 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அது அவர்களுடைய உத்வேகத்தை பல மடங்கு அதிகரிக்கும்.
இதனால் இந்த தொடர் இந்திய வீரருக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் கில் தற்போது இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

பாபர் அசாமை அவர் முந்த வேண்டுமென்றால் இந்த தொடரில் 200 ரன்களுக்கு மேல் அவர் அடிக்க வேண்டும். முதல் ஒருநாள் போட்டியில் கில் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கில் முதல் போட்டியில் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
குறிப்பாக மைதானத்தின் அளவு சிறியது என்பதால் கில் அடித்த பந்துகள் எல்லாம் சிக்ஸர் ஆக மாறியது. இதனால் கில்லை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். சிங்க பாய்ச்சலை மேற்கொண்ட கில் 37 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து கில் அதிரடியை காட்ட இந்தியாவின் ஸ்கோர் வேகமாக எகிறியது.
ஒரு கட்டத்திற்கு மேல் கில் கொஞ்சம் பொறுமையை காத்தார். ஸ்ரேயாஸ் சதம் அடிக்கும் வரை நிதானமாக இருந்த கில் 92 பந்துகளில் சதம் அடித்தார். இதில் ஆறு பவுண்டர்களும் நான்கு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார். இது மட்டுமல்லாமல் நடப்பாண்டில் ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த ஆறாவது சதம் இதுவாகும்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் 39 இன்னிங்ஸில் ஏழு சதம் அடித்திருக்கிறார்.இதன் மூலம் நடப்பாண்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கில் பெற்றிருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி 22 இன்னிங்ஸுடன் ஐந்து சதங்கள் அடித்து இருக்கிறார் .அடுத்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கில் குறைந்தபட்சம் 30 ரன்கள் அடித்தாலே அவர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications