நைனிடால் : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காரில் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு முன்னே சென்று கொண்டு இருந்த கார் பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதை அடுத்து தன் காரை நிறுத்தி விட்டு பதறி அடித்துக் கொண்டு ஓடிச் சென்று அந்த காரில் இருந்த நபரை காப்பாற்றி இருக்கிறார் ஷமி. அது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
முகமது ஷமி சமீபத்தில் நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சோகத்தில் இருந்தார்.

இந்த நிலையில், அவர் உத்தரகான்ட் மாநிலம் நைனிடால் நகரத்தில் காரில் சென்று கொண்டு இருந்தார். அந்த பகுதி முழுவதுமே மலைப் பிரதேசம் தான். இந்த நிலையில், அவர் காருக்கு முன்னே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்து இருக்கிறது.
அதைக் கண்ட உடன் தன் காரை நிறுத்தி விட்டு ஓடிச் சென்றார் முகமது ஷமி. நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். தற்போது விற்கப்படும் கார்களில் பெரும்பாலும் விபத்து நேரத்தில் செயல்படும் ஏர் பேக் (Air bag) பொருத்தப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த விபத்திலும் அந்த நபர் காயமின்றி தப்பி இருக்கிறார்.
ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியதோடு, அவருக்கு காயம் இருக்கிறதா எனவும் பரிசோதித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள முகமது ஷமி, "இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது வாழ்க்கை அளித்துள்ளார். அவரது கார் நைனிடால் அருகே என் காருக்கு முன்னே கீழே மலைப் பாதையில் சரிந்தது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டோம்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஷமியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர் அந்த நபரை காப்பாற்றிய கடவுள் ஷமி தான் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
முகமது ஷமி 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் பத்து போட்டிகளில் ஆடி எடுத்த விக்கெட் எண்ணிக்கையை, ஆறு போட்டிகளில் ஆடிய ஷமி முந்தி முதல் இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.