IND vs AUS: யார் இந்த ரென்ஷா? 42 சிங்கிள் ஓடியே அரைசதம்.. இந்தியாவுக்கு எதிராக அசத்திய ஆஸ்திரேலியர்
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் மேட் ரென்ஷா தனது முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில், நிதானமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் விளையாடிய அவர், அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். வெறும் 48 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ரென்ஷாவின் இந்த இன்னிங்ஸ், அவரது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவர் அடித்த அரைசதத்தில் 8 ரன்கள் மட்டுமே இரண்டு பவுண்டரிகள் மூலம் கிடைத்தது. மற்ற 42 ரன்களை அவர் சிங்கிளாக ஓடியே சேர்த்தார். சிறப்பாக ஆடிய ரென்ஷா 58 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் பிறந்த ரென்ஷா ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாடி வருவது சுவாரஸ்யமானது. மேட் ரென்ஷா யார்? எப்படி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார்?

யார் இந்த மேட் ரென்ஷா?
மேத்யூ தாமஸ் ரென்ஷா, மார்ச் 28, 1996 அன்று இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோவில் பிறந்தார். அவரது தந்தை இயன் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர். ரென்ஷாவுக்கு 7 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. பின்னர், அவருக்கு 10 வயதாகும்போது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரிஸ்பேனுக்கு இடம்பெயர்ந்தது.
ஆஸ்திரேலியாவில் தொடங்கிய கிரிக்கெட் பயணம்
ஆஸ்திரேலியாவில் தனது பள்ளிப் பருவத்திலேயே கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் காட்டிய ரென்ஷா, பிரிஸ்பேனின் கிராமர் பள்ளியில் பயின்றார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், உள்ளூர் கிரிக்கெட் வட்டாரங்களில் விரைவில் பிரபலமானார். இடது கை தொடக்க ஆட்டக்காரரான இவர், குயின்ஸ்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
ஷெஃபீல்ட் ஷீல்டு போன்ற முதல் தரப் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஆஸ்திரேலியத் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, அவரது பொறுமையான மற்றும் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடும் தன்மை, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமானவராக அவரைக் காட்டியது.
சர்வதேச அரங்கில் அறிமுகம்
தனது 20வது வயதில், 2016ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காகச் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே, பாகிஸ்தானுக்கு எதிராகச் சிட்னி மைதானத்தில் 184 ரன்கள் குவித்து, தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் சதம் அடித்த இளம் வீரர்களில் ஒருவரானார்.
டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்ததால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்ததன் விளைவாக, தற்போது இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரென்ஷா, நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கி, தனது முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். பெரிய பவுண்டரிகளை அடிக்காமல், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்களைச் சேகரித்த அவரது ஆட்டம், நவீன அதிரடி கிரிக்கெட்டுக்கு மத்தியில் பாராட்டத்தக்க இன்னிங்ஸாக அமைந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஒரு சுவாரஸ்ய புள்ளிவிவரம் (2020 முதல்):
100க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில், இரண்டு அல்லது அதற்கும் குறைவான பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மேட் ரென்ஷா இணைந்துள்ளார்.
- மார்னஸ் லாபுஷேன் (நியூசிலாந்துக்கு எதிராக, 2020)
- டி.எஸ். ஐரி (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2025)
- மேட் ரென்ஷா (இந்தியாவுக்கு எதிராக, 2025)


Click it and Unblock the Notifications