இது டெஸ்ட் மேட்ச்சா.. இல்லை டி20-யா? 20 ஓவரில் 127 ரன்.. ரோஹித் படையை கதற விட்ட ஹெட் - ஸ்மித் ஜோடி
பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சொதப்பலாக அமைந்தது. அதை பயன்படுத்திய ஆஸ்திரேலிய அணி முதலில் ஆமை வேகத்தில் ரன் சேர்க்க தொடங்கி 80 வது ஓவரை நெருங்கிய போது டி20 போட்டி போல அதிரடியாக ரன் சேர்க்கத் துவங்கியது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி முதல் 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. துவக்க வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்கள் எடுத்தும், உஸ்மான் ஹவாஜ் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். முதல் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் 2.10 ஆக இருந்தது.

அடுத்து லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து ஆடினர். 21 வது ஓவர் முதல் 40 வது ஓவர் வரை ஆஸ்திரேலிய அணி 56 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. லாபுஷேன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து இருந்தார். இந்த 20 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் 2.80 ஆக இருந்தது.
அடுத்து 41 வது ஓவர் முதல் 60 வது ஓவர் வரை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணியாக சேர்ந்து ரன் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் ஆமை வேகத்தில் ஆடிக் கொண்டிருந்தார். மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் சற்று நிதானமாகவே ரன் சேர்த்தார். இந்த 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்தது. அப்போது ரன் ரேட் 3.60 என்பதாக இருந்தது.
60 வது ஓவர் வரை ஆஸ்திரேலியா சற்று நிதானமாக ஆடி வந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களால் ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதை அடுத்து ட்ராவிஸ் ஹெட் சரவெடியாக ரன் குவிக்கத் துவங்கினார்.
ஸ்டீவ் ஸ்மித் 128 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதன் பின் அவரும் அதிரடிக்கு மாறினார். அவர் அடுத்த 50 ரன்களை 57 பந்துகளில் எடுத்தார். அதன் மூலம் தனது 33வது டெஸ்ட் போட்டி சதத்தை அவர் நிறைவு செய்தார். சுமார் 25 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டார்.
மறுபுறம் அதிரடி ஆட்டம் ஆடிய ட்ராவிஸ் ஹெட் 152 ரன்கள் வரை சேர்த்தார். 61 வது ஓவர் முதல் 80 வது ஓவர் வரையிலான 20 ஓவர்களில் மட்டும் ஸ்மித் - ஹெட் அதிரடியால் ஆஸ்திரேலியா 127 ரன்கள் எடுத்தது. அப்போது ரன் ரேட் 6.35 என்பதாக இருந்தது. துவக்கத்தில் ஒரு ஓவருக்கு 2 ரன் எடுக்கத் துவங்கிய ஆஸ்திரேலிய அணி, 60வது ஓவருக்கு பிறகு டி20 போட்டி பல ரன் குவிக்கத் தொடங்கியது.
அந்த அளவுக்கு இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. இந்திய அணியில் பும்ரா மட்டுமே அச்சுறுத்தும் வகையில் வீசினார். அதனால் பும்ரா ஓவர்களில் மட்டும் சற்று கவனமாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள், மற்ற பவுலர்களை வெளுத்து வாங்கினர். இதை அடுத்து 80 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்து இருந்தது.
அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த நிலையிலும், ட்ராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த அலெக்ஸ் கேரி விரைவாக ரன் சேர்த்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 101 ஓவர்களில் 405 ரன்களை எடுத்து இருந்தது ஆஸ்திரேலிய அணி.


Click it and Unblock the Notifications