மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
கடந்து முறை இந்த மைதானத்தில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி பிரிஸ்பேன் நகரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கினர். சுமார் 14 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
ஆனால் நேரம் போகப் போக மழையின் அளவு அதிகமாக இருந்ததால், மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனை அடுத்து முதல் நாள் ஆட்டம் தடை ஆனது. இந்த சூழலில் காபா டெஸ்டில் இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து பிரபல வானிலை ஆய்வு நிபுணர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் பெரும் அளவு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல் நாளில் மழை நின்றாலும் பிறகு லேசான மழை குறுக்கீடு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இதை அடுத்து இரண்டாவது நாளில் மழை பாதிப்பு அவ்வளவாக இருக்காது. போட்டி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான், மூன்றாவது நாளில் மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் போன்று நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.