சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்சில் இந்திய அணி 200 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தால் கூட வெற்றி பெற முடியாத நிலையில் இருக்கிறது. முக்கிய வீரரின் காயத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் - கவாஸ்கர் தொடரை 2 - 2 என சமன் செய்ய முடியும். அப்படி சமன் செய்வதன் மூலம் கடந்த முறை இந்த கோப்பையை வென்ற இந்திய அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் மட்டுமே எடுத்தன. முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
அடுத்து இரண்டாவது நாள் அன்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி எத்தனை ரன்கள் எடுக்கும்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஒருவேளை இந்திய அணி மேலும் 50 ரன்கள் சேர்த்து 200 ரன்கள் முன்னிலை பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு 200 என்ற இலக்கை நிர்ணயித்து, கட்டுப்படுத்தி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு சிட்னி மைதானத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், இந்திய அணி ஒரு சிக்கலில் உள்ளது.
இந்திய அணியின் தற்காலிக கேப்டனும், முதன்மை வேகப் பந்துவீச்சாளருமான பும்ரா காயத்தில் சிக்கி இருக்கிறார். அவருக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியுமா? என்பது தெரியவில்லை. பிசிசிஐ வல்லுநர் குழு பும்ராவை பந்து வீச வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீசவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அந்த சூழ்நிலையில் 200 ரன்கள் என்ற இலக்கை கூட இந்திய அணிக்கு போதாது. இது குறித்து சுனில் கவாஸ்கரும் இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார். ஒருவேளை பும்ரா பந்து வீசினால் 140 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்து கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியும். ஆனால், பும்ரா இல்லை என்றால் 200 ரன்கள் என்ற இலக்கு கூட போதாது என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.