சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருப்பது தவறான முடிவு என்றும், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பது பற்றியும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான பிட்ச் அதிக புற்களுடன் காணப்பட்டது. அதனால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச்-சில் அதிக விக்கெட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல நாதன் லியோன் என ஒரே ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியது.

ஆனால், இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் ஓரளவு ரன் சேர்ப்பார்கள் என்றாலும் கூட, இரண்டு ஸ்பின்னர்கள் அவசியமில்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் மூன்று முழு நேர பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர். பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றனர். நான்காவது வேகப் பந்துவீச்சாளராக ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இடம் பெற்றார். நிதிஷ் குமார் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், நான்காவது பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்திருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்தது. இது பற்றி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "அணித் தேர்வில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சிட்னியில் பிட்ச் பச்சை பசேல் என உள்ளது. ஆனால், நாம் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்து இருக்கிறோம்." என்றார்.
மேலும், "ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்தோம். ஆனால், இந்திய அணி பேட்டிங் குறித்து கவலை அடைந்து ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்து இருக்கிறது. தற்போதைய இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் இந்திய அணி என்ன செய்ததோ அதை செய்ய மறுக்கிறது. பேட்டிங் மிகவும் முக்கியம்தான். ஆனால், பவுலர்கள்தான் போட்டிகளையும், தொடர்களையும் வென்று கொடுப்பார்கள். நாம் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை வென்றதற்கு காரணம் பவுலர்கள் தான்." என்றார்.