மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரரான சாம் கோன்ஸ்டாஸை A Star is Born என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் கொண்டாடி வந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி அசத்தலாக விளையாடி சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள், ரியல் ஸ்டார் நிதிஷ் குமார் ரெட்டி தான் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கியிருந்தாலும், இந்திய அணி மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது. இதனிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு இடையிலான மோதலாகவும் இந்த ஆட்டம் மாறி இருக்கிறது.

ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ராவின் பவுலிங்கில் அதிரடியாக ரன்களை குவித்தார். அறிமுக இன்னிங்ஸிலேயே சிறப்பாக ஆடிய சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 60 ரன்களை விளாசி அசத்தினார். அவர் ஜடேஜா பவுலிங்கில் இறுதியாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
அப்போது ஆஸ்திரேலியா வர்ணனையாளர்கள் அவரை, A Star was Born என்று கூறி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒரேயொரு இன்னிங்ஸில் பும்ராவை சிறப்பாக எதிர்கொண்ட ஒரு வீரரை ஸ்டார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடியது இந்திய ரசிகர்களிடையே விவாதமாகியது. ஏனென்றால் அறிமுக இன்னிங்ஸில் பலரும் மிகச்சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமான மயங்க் அகர்வால் ஆடாத ஆட்டத்தையா சாம் கோன்ஸ்டாஸ் ஆடிவிட்டார். சாம் கோன்ஸ்டாஸை தலையில் தூக்கி கொண்டாடும் அளவிற்கு ஒன்றும் அவர் ஆடிவிடவில்லை என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டின் 3வது நாள் ஆட்டத்தில் 171 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசி அசத்தியுள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி.
21 வயதிலேயே ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்து நிதிஷ் குமார் ரெட்டி ஆடிய ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணியை, வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து மீட்டெடுத்துள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. இதனால் இந்திய ரசிகர்கள் "The Real Star is Born" என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.