திருவனந்தபுரம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 53 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்தில் 31 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - மேத்யூ ஷார்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கினார். தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று 20 ரன்களை விளாசினர். இதனால் உடனடியாக ஸ்பின்னரான ரவி பிஷ்னாட் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஷார்ட் 19 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த இங்லிஸ் 2 ரன்கள் எடுத்து திலக் வர்மாவின் அபார கேட்ச்சால் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 12 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் ஸ்மித் 19 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஸ்டாய்னிஸ் - டிம் டேவிட் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். முகேஷ் குமார் வீசிய 10வது ஓவரில் மட்டும் 22 ரன்கள் சேர்க்கப்பட, ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது. இதனால் இவர்களை வீழ்த்த வேண்டிய நிலைக்கு இந்திய பவுலர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் 14வது ஓவரை வீசிய ரவி பிஷ்னாய், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 38 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பின் ஸ்கோர் போர்ட் அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பவுண்டரி விளாச முயற்சித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ஸ்டாய்னிஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் அப்பட் மற்றும் எல்லீஸ் இருவரும் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடைசி நேரத்தில் கேப்டன் வேட் அதிரடியாக சில சிக்சர்களை விளாசி தள்ளினார். இறுதியாக 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் அக்சர் படேல் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.