அடிலெய்டு: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், 2வது முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடரையும் இழந்திருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

7 மாதங்களுக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் நடந்து வரும் ஒருநாள் தொடரை 2-0 என்ற இழந்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கும் போது, இந்திய அணி முழு படையுடன் சென்று தோல்வி அடைந்துள்ளது.
இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ஏற்கனவே பயிற்சியாளரான பின் முதல்முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த போது இலங்கை அணியிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அப்போதே கம்பீரை ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.
இதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்றிருந்தாலும், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது. அடுத்தடுத்து கம்பீர் ஒருநாள் தொடர்களில் சொதப்புவது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு தொடர்களிலும் கம்பீர் சீனியர் வீரர்களுடன் பயணித்திருக்கிறார்.
சுப்மன் கில் புதிய கேப்டனாக இருந்தாலும், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் உள்ளிட்ட பல்வேறு சீனியர்கள் விளையாடி இருக்கின்றனர். இதனால் கம்பீர் அணித் தேர்வில் செய்த சொதப்பல்களும், ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பிடிவாதமும், ஜடேஜாவை கழட்டிவிடவும் செய்த திட்டங்களே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.