பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த உத்தேச அணியில் மூன்று வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த மூவரில் இருவருக்கு இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி சரியான துவக்க வீரர் இன்றி தவித்து வருகிறது. டேவிட் வார்னர் ஓய்வுக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக ஆடினார்.

ஆனால், அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில் உஸ்மான் கவாஜா உடன் துவக்க வீரராக சவுத் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நாதன் மெக் ஸ்வீனி களமிறங்க உள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் முதல்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜோஷ் இங்லிஸ்-க்கு யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்காட் போலண்ட் மாற்று வேகப் பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய அணியில் புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்த மூன்று புதிய வீரர்களைத் தவிர்த்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
சுழற் பந்துவீச்சாளராக நாதன் லியோன் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். வேகப் பந்துவீச்சாளர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி :
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.