IND vs AUS: "செமி பைனல் பிட்ச்சை தயார் செய்ததே ஒரு ஆஸ்திரேலியர் தான்".. யார் அந்த மேத்யூ சாண்டரி?
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான பிட்சை தயார் செய்ததே ஆஸ்திரேலியர் ஒருவர் தான் என்ற தகவல் பரவி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த அரையிறுதி போட்டியில், துபாய் மைதான ஆடுகளத்தை தயாரிப்பது ஆஸ்திரேலியர் என்பது சிலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதன் பின்னணி என்ன? எதற்காக ஆஸ்திரேலியரான மேத்யூ சாண்டரி துபாய் மைதான ஆடுகளத்தின் பிட்சை தயார் செய்கிறார்? அதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் மைதானங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஏன் அங்கு ஒரு ஆஸ்திரேலியர் பிட்ச்சை தயார் செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Image Credits: ILT20
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கிரிக்கெட் அமைப்பு சிறந்த முறையில் கிரிக்கெட் மைதானங்களை பராமரித்து, உலகத் தரத்தில் வசதிகளை கொடுப்பதால் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை அங்கு நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
உதாரணத்திற்கு பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி மைதானங்களில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல ஆப்கானிஸ்தானிலும் போதிய கிரிக்கெட் வசதிகள் இல்லாததாலும், அந்த நாட்டில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாகவும் ஆப்கானிஸ்தான் அணியும் தான் ஏற்று நடத்தும் தொடர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்தும்.

Image Credits: ILT20
மேலும், தற்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், இந்திய அணி ஆடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் மைதானங்கள் உலகின் பொதுவான மைதானங்களாகவே மாறிவிட்டது.
அதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் தரம் தான். அங்கு உலக தரத்திலான கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வசதிகள் உள்ளன. உலகின் சிறந்த வல்லுனர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே துபாய் ஆடுகளத்தில் உள்ள பிட்ச்களும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ சாண்டரி அந்த மைதானத்தின் பிட்ச் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மேத்யூ சாண்டரி நீண்ட காலமாகவே துபாய் மைதானத்தில் தான் பணியாற்றி வருகிறார். அங்கு நடக்கும் உள்நாட்டு டி20 போட்டிகள், சர்வதேச போட்டிகள் என அனைத்திற்கும் அவரே பிட்ச்களை தயார் செய்கிறார். எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான அரையிறுதிக்கு மட்டுமே அவர் அங்கு பிட்சை தயார் செய்கிறார் என்பது போன்ற ஒரு தவறான எண்ணம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் அந்த மைதானத்தின் நீண்ட கால ஊழியர்.
எனவே, மேத்யூ சாண்டரி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக செயல்படுவாரா? என்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானவை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான அரையிறுதிக்கு என்ன மாதிரியான பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் ஊடகங்களிடம் பேசி இருக்கிறார் மேத்யூ சாண்டரி.
வழக்கம்போல துபாய் மைதானத்தில் எவ்வாறு மெதுவான, சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருக்குமோ அதே போன்ற ஒரு பிட்ச் தான் அரையிறுதி போட்டிக்கும் தயாரிக்கப்பட்ட இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார். இந்த அரையிறுதிப் போட்டியில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான நிலை இருக்கும் என்பதால் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications