மும்பை : இடது கை பேட்ஸ்மேன்களை வைத்து 2024 டி20 உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என இந்திய டி20 அணியில் பெரிய மாற்றத்தை செய்து வருகிறது பிசிசிஐ.
இந்திய ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதும் பலமான அணியாக இருந்துள்ளது. வெற்றி சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால், டி20 அணியைப் பொறுத்தவரை இந்திய அணி ஊசலாடிக் கொண்டே தான் இருக்கிறது.

அதை மாற்ற அதிரடியாக மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ கட்டமைத்து வருகிறது. அதிலும் ஒரு திட்டத்தை தேர்வுக் குழு வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இடது கை பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் இருந்தே ஆக வேண்டும் என பார்த்து, பார்த்து இடது கை பேட்ஸ்மேன்களை டி20 அணியில் தேர்வு செய்து வைத்துள்ளனர்.
உதாரணத்துக்கு தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணியில் ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் இஷான் கிஷன், ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மா, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் இறங்கும் ரிங்கு சிங் மற்றும் அக்சர் பட்டேல் என முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ஐந்து பேர் இடது கை பேட்ஸ்மேன்கள்.
இது வெறும் இடது - வலது கை பேட்ஸ்மேன்களை மாற்றி, மாற்றி இறக்கி எதிரணியின் பந்துவீச்சை கடினமாக்கும் திட்டம் அல்ல. அதையும் தாண்டி வலது கை வேகப் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் செய்து போட்டியில் வெற்றி பெறும் உத்தி.
டி20 போட்டிகளில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்த ஐபிஎல் அணிகள் அதை கடந்த சில தொடர்களில் செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளன. அதே உத்தியை பிசிசிஐ தற்போது செயல்படுத்த துவங்கி இருக்கிறது.
இது எப்படி வேலை செய்யும் என்றால் ஒரு அணியில் அதிக இடது பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்காக எதிரணி தங்கள் அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு, வலது ஆஃப் ஸ்பின்னர்கள் வீசினால் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது என்பதால் வலது கை ஆஃப் ஸ்பின்னர்களையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த மாற்றங்களை செய்தால் சில சமயம் வெற்றிக் கூட்டணி மாறிவிடும், அல்லது அணியின் சமநிலை மாறும். சில அணிகளிடம் சரியான வீரர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் அணித் தேர்விலேயே சொதப்பல் நடந்து விடும்.
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நான்கு இடது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்தின. அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை கவனத்தில் கொண்டே பிசிசிஐ இந்த திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் அணிகளில் 25 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் இருந்து இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள், வலது கை ஆஃப் ஸ்பின்னர்களை தேர்வு செய்வதே சிக்கலாக இருக்கும் நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்து அழைத்து செல்லக் கூடிய சூழலில் ஒரே நேரத்தில் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள், வலது கை வேகப் பந்துவீச்சாளர்கள், வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் என அதிக இடத்தை பந்துவீச்சாளர்களுக்கே கொடுக்க முடியாத நிலை இருக்கும்.
அதனால், இந்திய அணி அதிக இடது கை பேட்ஸ்மேன்களோடு களம் கண்டால், பல அணிகளால் அதற்கு ஈடாக அணியை தேர்வு செய்ய முடியாது. இதன் காரணமாகவே பிசிசிஐ இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.