IND vs AUS: 31 வயதில் "பேகி கிரீன்" வாங்கியவன்.. இந்திய அணியை தவிக்க விட்ட அறிமுக வீரர் வெப்ஸ்டர்
சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டரான வெப்ஸ்டர் இடம் பெற்றார். அவருக்கு 31 வயது ஆகிறது. இத்தனை வயதில் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் போட்டி தொப்பியான "பேகி கிரீன்"-ஐ (Baggy green) அவர் பெற்றார்.

அந்த தொப்பியை அணிவதை ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமையாக கருதுகின்றனர். அந்த பெருமையை காக்கும் வகையில் பியூ வெப்ஸ்டர் தனது அறிமுகப் போட்டியில் பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பந்து வீசிய பியூ வெப்ஸ்டர் இந்திய பேட்ஸ்மேன்களை சோதித்தார். அவரது பந்துவீச்சில் எளிதாக ரன் குவிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். எனினும், பியூ வெப்ஸ்டர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. அப்போது மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து சென்றனர். ஆனால், நான்கு விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஆடுகளத்துக்கு வந்த பியூ வெப்ஸ்டர் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். அவரது அரை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்தது.
இல்லை எனில் ஆஸ்திரேலிய அணி 140 அல்லது 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி இருக்கும். அது இந்திய அணிக்கு சிறிய அளவில் முன்னிலையை அளித்திருக்கும். ஆனால், பியூ வெப்ஸ்டரின் ஆட்டத்தால் இந்திய அணிக்கு சமமான ஸ்கோரை ஆஸ்திரேலிய அணி எடுத்தது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான பிட்ச் மிகவும் கடினமாக இருப்பதால் இந்திய அணி 30 ரன்கள் அல்லது 40 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய ஊக்கமாக இருந்திருக்கும். அதை உடைத்து இருக்கிறார் பியூ வெப்ஸ்டர். அவர் 105 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 141 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications