மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. பாலோ ஆனை இந்தியா தவிர்க்குமா என ரசிகர்கள் சோகமாக இருந்த நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் சுந்தர் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினர்.

நிதிஷ் குமார் அபாரமாக சதம் விளாசிய நிலையில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. அப்போது கடைசி விக்கெட் ஜோடி, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் அது பந்து வீசும் அணிக்கு பெரிய பிரச்சினையை கொடுக்கும். இதனால் சிராஜ், நிதிஷ் குமார் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடியது.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய பந்து ஒன்றை சிராஜ் அடித்தார். அந்த பந்து நேராக ஸ்மித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடிய போது நடுவர்கள் பேட்டில் பந்து பட்ட போது, அதே சமயம் தரையிலும் பந்து பட்டதா இல்லையா என்பதை களநடுவர்கள் மூன்றாம் நடுவரை அணுகி செக் செய்தனர்.
அப்போது இதன் ரீப்ளேவை பார்த்த மூன்றாம் நடுவர் சைகாத், பந்து பேட்டில் பட்ட போது, அதே நேரத்தில் தரையில் பட்டதாக கூறி இதனை கேட்ச் கிடையாது என்று அறிவித்தார். இதனை கொஞ்சம் கூட ஏற்காத ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், இதனை மீண்டும் டி ஆர் எஸ் மூலம் செக் செய்ய விரும்புவதாக கூறினார். நடுவர்கள் தாங்களாகவே தான் இதனை ரிவ்யூ செய்ததாகவும் தற்போது என்னுடைய ரிவ்யூவை பயன்படுத்தி நான் மீண்டும் செக் செய்ய விரும்புகிறேன் என்றும் கம்மின்ஸ் கூறினார்.
எனினும் நடுவர்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அடுத்த சில ஓவர்களில் இந்தியா தனது பத்தாவது விக்கெட்டை இழந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், மீண்டும் டிஆர்எஸ் கேட்டால் அதனை செக் செய்வது நடுவர்களின் கடமை என்றும், அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். டிஎன்பிஎல் போட்டி ஒன்றில் நடுவரின் முடிவை எதிர்த்து அஸ்வின் இரண்டாவது முறையாக டிஆர்எஸ்ஐ பயன்படுத்தினார். அதே போல் கம்மின்ஸ் செய்ய முற்பட்டபோது அதற்கு நடுவர்கள் அனுமதி அளிக்கவில்லை.