லண்டன் : இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் கிறிஸ் வோக்ஸ் உலகின் முன்னணி பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு இந்திய வீரரை பதிலாக கூறி இருக்கிறார்.
சமீப காலமாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி குறித்து கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் தான் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் என பலரும் கூறி உள்ளனர்.

ஆனால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, சில மாதங்களாக காயத்தில் இருந்ததால் போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் இருந்தார். அதனால் அவரது ஆட்டம் குறித்து யாரும் அதிகமாக பேசவில்லை. உலகக்கோப்பை தொடரில் பும்ராவின் ஆட்டம் அனைவரையும் பேச வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அதற்கு முன்னரே கிறிஸ் வோக்ஸ் பும்ரா தான் உலகின் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் என்ற கருத்தை ஆணித்தரமாக வைத்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணமும் மிக முக்கியமான ஒன்று.
முன்னணி கிரிக்கெட் பத்திரிக்கையான விஸ்டன் மாத இதழுக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் வோக்ஸ், "அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா தான் நம்பர் 1 என நான் கருதுகிறேன். அவர் தனது ஆட்டத்தால் பரபரப்பை கிளப்பக் கூடியவர். அவர் தனித்துவம் வாய்ந்தவர் இல்லையா? அவரது பவுலிங் ஓட்டம் வேறு யாரைப் போலவும் இல்லை. அதிக வேகம், துப்பாக்கியைப் போன்ற ஸ்லோ பந்து, நங்கூரம் போன்ற யார்க்கர், ஒரு குறைந்த ஓவர் பந்துவீச்சாளருக்கு என்னென்ன வேண்டுமோ அது அனைத்துமே அவரிடம் உள்ளது" என்று கூறினார்.

நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் பும்ரா பந்து வீசினார். அதில் மூன்று போட்டிகளில் ஆடிய அவர் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் நல்ல பார்மில் இருப்பதையும் நிரூபித்து இருக்கிறார். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பும்ரா ஆட உள்ளார். அதிலும் அவர் அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.