
அறிமுகம்
இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் கேமரான் கிரீன் அறிமுகம் ஆனார். ஆல் - ரவுண்டரான அவர் இந்தப் போட்டியில் பவுலிங் பேட்டிங் என இரண்டிலும் தன் பங்களிப்பை செய்தார்.

பந்துவீச்சு எப்படி?
அவர் முதலில் பந்துவீச்சில் சற்று சுமாராகவே செயல்பட்டார். 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து இருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அடுத்ததாக இந்திய அணி நிர்ணயித்த 303 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடிய போது பேட்டிங் செய்ய வந்தார்.

பயம்
அறிமுக வீரர் என்பதால் முதலில் சற்று பயத்துடன் பேட்டிங் செய்தார். 23வது ஓவரில் வந்த அவர் வெற்றிக்கு 186 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கி இருந்தார். அவர் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் ஏழாம் வரிசைக்கு மேலே பேட்டிங் செய்ததில்லை.

பதற்றத்துடன் இருந்தார்
முதன் முறையாக அதுவும் தன் அறிமுக சர்வதேச போட்டியில் அணிக்கு உதவ வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் பேட்டிங் செய்ததால் பதற்றத்துடன் இருந்தார். அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் அவருக்கு பின்னே நின்று இருந்தார்.

என்ன கேட்டார் ராகுல்?
ஷர்துல் தக்குர் ஓவரை தடுமாறி சந்தித்த நிலையில், அடுத்து ஜடேஜா ஓவரை சந்திக்க தயார் ஆனார் கேமரான் கிரீன். அப்போது ராகுல் பதற்றமாக உள்ளதா? என கேட்டுள்ளார். அதற்கு கிரீன் "ஆம், கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது" எனக் கூறி உள்ளார்.

உற்சாகம்
அப்போது ராகுல் அவரை உற்சாகப்படுத்தும் வகையில், நன்றாக ஆடுங்கள் என கூறி இருக்கிறார். இது குறித்து போட்டி முடிந்த உடன் கேமரான் கிரீன் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். தான் இதற்கு நேர்மாறாக நடக்கும் என நினைத்ததாக கூறினார்.

கோலி என்ன செய்தார்?
கேமரான் கிரீன் ஆடிய போது அவரை அச்சுறுத்தும் வகையில் கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்களிடம் சத்தமாக பேசி வந்தார். ஆனால், அப்போது ராகுல் தன்னிடம் ஆறுதலாக பேசி உற்சாகம் அடைய வைத்தார் என கூறி உள்ளார் கிரீன்.

நினைவில் வைத்திருப்பேன்
மேலும், ராகுல் கூறிய வார்த்தைகளால் தான் வியந்து போனதாகவும், இதை தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார் கேமரான் கிரீன். இந்தப் போட்டியில் கிரீன் 27 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

எப்படி ஆடினார்?
முதலில் அவர் 12 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். பின் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆலோசனைகளின் படி ஆடிய அவர் 27 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். 1 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











