துபாய்: இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, கூப்பர் கானலியை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். முகமது ஷமி பந்து வீசியபோது கூப்பர் கானலி பேட்டிங் செய்த விதத்தை பார்த்து கடும் கோபம் அடைந்ததாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஆல்ரவுண்டர் கூப்பர் கானலி துவக்க வீரராக டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து பேட்டிங் செய்ய வந்தார்.

வந்தது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் கூப்பர். முகமது ஷமி வீசிய ஓவரில் அவரால் ஒரு பந்தை கூட சரியாக அடிக்க முடியவில்லை. கூப்பர் தான் சந்தித்த முதல் 8 பந்துகளையும் பேட்டிலேயே படாமல் தவிர்த்தார். ஒன்பதாவது முறை பந்து பேட்டில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் வசம் கேட்ச் ஆனது. இந்திய அணி மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தியது.
மறுபுறம் நின்று கொண்டிருந்த டிராவிஸ் ஹெட், கூப்பர் கானலியிடம் பிட்ச் மிகவும் மந்தமாக இருக்கிறது, எல்லா பந்திலும் பவுண்டரி அடிக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆனால் அதையும் கூப்பர் கானலி காதில் வாங்கவில்லை. இதை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார் இயான் ஹீலி.
"நான் பயங்கர கோபத்தில் இருந்தேன். டிராவிஸ் ஹெட் மறுபுறம் இருந்து, "பிட்ச் மிகவும் மெதுவாக இருக்கிறது" என்று கூப்பரிடம் சைகையில் கூறினார். ஆனால், கூப்பர் தொடர்ந்து பேட்டை சுற்றிக் கொண்டே இருந்தார். இந்த சூழ்நிலையில் பந்தை இடைவெளியில் அடித்து விட்டு ரன் சேர்க்க முயல வேண்டும். பேட்டை சும்மா சுற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. பவுண்டரி அடிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கக் கூடாது."
"கூப்பர் 9 பந்துகளை சந்தித்தார். அதில் ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் 8 பந்துகளை அவர் தவறவிட்டார். ஒன்பதாவது முறை எட்ஜ் செய்தார். முகமது ஷமி பந்து வீசுகிறார் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இது மிக மோசமான சிந்தனை. இது போன்ற கடினமான சூழ்நிலையில் பேட்டிங் செய்தால், நீங்கள் அதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்."
"கூப்பர் வெறுமனே பந்தை அடிக்க தான் முயற்சி செய்கிறார். பந்து எங்கே வருகிறது என்பதை பார்க்கவில்லை. இந்த பிட்சில் பேட்டிங்கில் மூன்றரை மணி நேரம் கடின வேலை செய்ய வேண்டும். இங்கு பந்து பேட்டில் படுவதற்கும், கால்களை நகர்த்தி ஆடுவதற்கும் அதிக சிந்தனையை செயல்படுத்த வேண்டும். கூப்பர் கானலியிடம் கால்களை நகர்த்தும் செயலே இல்லை. அவரது ஷாட் தேர்வும் மிக மோசமாக இருந்தது. டெக்னிக்கும் மோசமாக இருந்தது. அவர் பந்தை பார்க்கவே இல்லை. அவர் ஃபீல்டிங்கில் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார். பந்து தானாகவே அங்கு சென்று விடும் என்று நினைத்தார். அதனால் ஒவ்வொரு முறையும் பந்தை அடிக்க முடியாமல் தவறவிட்டார்" என்றார் இயான் ஹீலி.