அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து கடும் விமர்சனம் எழுந்து உள்ளது. அவரது கேப்டன்சி சரியில்லை என பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு இன்றி வர்ணனையாளராக மாறி இருக்கும் புஜாரா, ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மோசமாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. அதனால் தான் அவரால் சரியாக கேப்டன்சியை செய்ய முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ரோஹித் சர்மா ரன் குவிக்கத் தொடங்கி விட்டால் அவரது கேப்டன்சி நேர்மறையாக மாறும் எனவும் அவர் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "ரோஹித் சர்மா முதலில் அவரது பேட்டிங் ஃபார்மை மீட்க வேண்டும். ஏனெனில். அவர் ரன்கள் குவித்தால் அவரது கேப்டன்சியில் நாம் மாற்றத்தை பார்க்கலாம்." என்றார்.
மேலும், "ஒரு கேப்டன் பேட்டிங்கில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டால் அது அவரது கேப்டன்சியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் எப்போதெல்லாம் ரன் குவிக்கிறாரோ, அப்போதெல்லாம் அவரது கேப்டன்சியிலும் நேர்மறையான தாக்கம் ஏற்படும்." என்றார் புஜாரா.
மேலும், "ரோஹித் சர்மா அனுபவம் மிக்க வீரர். அவருக்கு எப்படி ரன் குவிக்க வேண்டும் என்பது தெரியும். அவர் இப்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால், ஒரு நல்ல துவக்கம் இப்போது அவருக்கு அவசியமாக உள்ளது. அவர் ஒரு முறை 20 அல்லது 30 ரன்கள் எடுத்து விட்டால் அதை பயன்படுத்தி அவர் பெரிய அளவில் ரன் குவிப்பார். அவர் முதல் அரை மணி நேரத்தில் நன்றாக பேட்டிங் செய்வார் என நம்புகிறேன்." என்று கூறி இருக்கிறார் புஜாரா.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆடிய கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது.