மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியா ஏ அணிக்காக ஆடிய துருவ் ஜுரெல் அரைசதம் விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியில் துருவ் ஜுரெலை நேரடியாக பேட்ஸ்மேனாக மட்டும் கூட விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடி வந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. துருவ் ஜுரெல் ஒற்றை ஆளாக போராடி 186 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை குவித்தது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதும் இளம் வீரரான துருவ் ஜுரெல் களமிறங்கி டெய்லண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 122 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 68 ரன்களை விளாசி அசத்தினார்.
இதனால் இந்தியா ஏ அணி 2வது இன்னிங்ஸில் 229 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஆஸ்திரேலியா ஏ அணியின் வெற்றிக்கு இந்தியா ஏ அணி 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றதோடு, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
இந்த இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய துருவ் ஜுரெல் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை துருவ் ஜுரெல் விளாசி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா பிட்சில் இருக்கும் பவுன்ஸை எளிதாக கையாண்டதால், துருவ் ஜுரெல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது. சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக அந்த இடத்தில் துருவ் ஜுரெல் விளையாட வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் சர்ஃபராஸ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஒரே பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை உணர்ந்து துருவ் ஜுரெல் செயல்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் விவிஎஸ் லக்ஷ்மணை போல் துருவ் ஜுரெல் டவுன் தி ஆர்டரில் களமிறக்கி விளையாட வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு வருகின்றன.