ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா மண்ணில் நடத்தப்பட்டது. அந்த உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதன்பின் 2009ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து நடத்தியது. அதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின் 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தியது.

இதில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. பின்னர் 2014ஆம் ஆண்டு வங்கதேச மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரை இலங்கை அணி வென்று சாதனை படைத்தது.
இதன்பின் இந்திய மண்ணில் முதல்முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. பின்னர் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.
இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி வென்று, முதல்முறையாக டி20 சாம்பியனாக மாறியது. இதன்பின் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்று சாதித்தது. தற்போது 9வது டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் வெளியேறி இருக்கின்றன.
இதன் மூலம் இதுவரை எந்த அணியும் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தி வெற்றி கண்டதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் 9வது டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியால் வெல்ல முடியாததால், மீண்டும் அதிர்ஷ்டமில்லை என்று பேச்சுகள் எழுந்துள்ளன. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது.
இதனால் இந்தியா அல்லது இலங்கை அணிகள் வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை, தொடரை நடத்திய நாட்டு அணியால் வெல்ல முடிந்ததில்லை. அதனை இந்திய அணியின் கேப்டன் தோனி மாற்றி காட்டினார். அதுபோல் இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பையை வென்று சாதிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.