IND vs AUS: பெரும் அபாயத்தில் இருந்து காப்பாற்றிய ஜடேஜா.. ஆஸ்திரேலியா 474 ரன்கள்.. பும்ரா 4 விக்கெட்
மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்து வீசத் துவங்கிய உடன் 2 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். இல்லையெனில் ஆஸ்திரேலிய அணி 500 ரன்களை தாண்டி பெரிய ஸ்கோரை எடுத்து இருக்கும்.
முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்த நிலையில், பாட் கம்மின்ஸ்-உடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். தனது 34 வது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.

அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்து ஆடிய பாட் கம்மின்ஸ் 49 ரன்கள் சேர்த்தார். அவர்களது கூட்டணி 100 ரன்களை கடந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவை அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் வந்த மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் ஆட்டம் இழந்தார்.
ஜடேஜா 2 விக்கெட்களை குறுகிய இடைவெளியில் வீழ்த்தியதால் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆட முடிவு செய்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆகாஷ்தீப் பந்து வீச்சில் காலில் பட்ட பந்து பெயில்ஸ்-ஐ தகர்த்ததால் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்து இருந்தார்.
கடைசியில் நாதன் லியோன் மற்றும் ஸ்காட் போலான்ட் நேரத்தை கடத்தினர். பின்னர் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் சேர்த்து இருந்தது. இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முகமது சிராஜ் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதே சமயம், அதிக ரன்களை வாரி இறைத்தார். இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 500 ரன்கள் எடுத்திருக்க முடியும். ஆனால், ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் விக்கெட்களை வீழ்த்தினார். அதனால், ஸ்மித் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு தனது விக்கெட்டை இழந்தார்.


Click it and Unblock the Notifications