சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு பேசிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இனி இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறி இருந்தார். அதன் மூலம் இனி உள்ளூர் போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் மட்டும் தான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என மறைமுகமாக கூறி இருந்தார்.
ஆனால், இது இரட்டை வேடம் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன் பிசிசிஐ-யும் இதே விஷயத்தை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இனி இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், இதற்கு முன் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு எந்த அளவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பதை பார்த்தாலே இது ஒரு கண்துடைப்புக்காக சொல்லப்படும் விஷயம் என்பதை புரிந்து கொள்ளலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களில் மிகச் சிலருக்கு மட்டும் தான் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படி வாய்ப்பு பெற்றவர்களுக்கும் பிளேயிங் லெவனிலும், உத்தேச அணியிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம் ஆகும். உதாரணத்திற்கு ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான், கே எஸ் பாரத் என பல வீரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தனர்.
அவர்கள் அனைவருமே உள்ளூர் போட்டிகளில் அதிக ரன் குவித்ததன் காரணமாகவே இந்திய அணியில் வாய்ப்பு பெற்றனர். ஆனால், இப்போது அவர்களின் நிலை என்ன என்பதை பார்த்தாலே ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை, பலருக்கு உத்தேச அணியில் கூட இடம் கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்படி இருக்கும்போது ஏற்கனவே இந்திய அணியில் இருக்கும் வீரர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு சொல்வதும், இனி ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரர்களைத்தான் இந்திய அணியில் தேர்வு செய்வோம் என்று சொல்வதும் நம்பும்படியாக இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை மறைக்க, இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் எத்தனை ரன் குவித்து இருக்கிறார்கள்? என்பதோடு வாய்ப்பின்றி வெளியே அமர வைக்கபட்டு இருக்கும் சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளூர் போட்டிகளில் எத்தனை ரன்கள் குவித்து இருக்கிறார்கள்? என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இங்கு நடக்கும் அரசியல் நமக்கு புரியும்.
அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் ரன் குவிக்காத வீரர்களுக்கு நீண்ட காலமாக வாய்ப்பு அளிப்பது ஏன்? குறிப்பாக சுமாராக ஆடும் சுப்மன் கில்லுக்கு இத்தனை முக்கியத்துவம் அளிப்பது ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் உள்ளூர் போட்டிகளில் ஆடினால் வாய்ப்பு என பேசுவது நியாயமற்றது.