சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சீனியர் வீரரான புஜாரா கட்டாயம் தேவை என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் போராடிய சம்பவம் தெரிய வந்துள்ளது. ஆனால் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கடைசி வரை புஜாரா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. இதனால் கடைசி போட்டியில் வென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை ரீடெய்ன் செய்யுமா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் 5 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா இதுவரை 31 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இவர் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 92 ரன்களும், வங்கதேச டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் 42 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளார்.
இன்னொரு பக்கம் விராட் கோலி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளுக்கு தாமாக விக்கெட்டை கொடுத்து வெளியேறி வருகிறார். இதனால் சீனியர் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இன்னொரு பக்கம் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் திண்டாடி வருகிறார். ஏனென்றால் அவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதாக பெஞ்ச் செய்யவும் முடியாத நிலை தான் இதுவரை இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு புஜாரா கட்டாயம் தேவை என்று கம்பீர் அழுத்தம் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் கம்பீர் கொடுத்த பரிந்துரைகளில் புஜாராவை சேர்ப்பதில் மட்டும் தேர்வு குழு எந்த ஆர்வமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் புஜாரா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், புஜாரா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு வேண்டும் என்று அடம்பிடிக்க காரணம், கடந்த 2 சுற்றுப்பயணத்திலும் அவரின் ஆட்டம் தான்.
இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 993 ரன்களை விளாசி இருக்கிறார். 2018-19 சுற்றுப்பயணத்தில் 1,258 பந்துகளில் 523 ரன்களையும், 2020-21 சுற்றுப்பயணத்தில் 928 பந்துகளில் 271 ரன்களையும் விளாசி இருக்கிறார். புஜாரா இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம் என்று ஆஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட்டே கூறியிருந்தார்.
அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா பவுலர்களை புஜாரா ஆட்டி படைத்தார் என்றே சொல்ல வேண்டும். 2023 உலக டெஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா, அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் கூட ரஞ்சி கிரிக்கெட்டில் தனது 18வது இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.