மும்பை: ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய வீரர்கள் மீதான மரியாதை உச்சத்தில் இருப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆரம்ப நாட்களில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் ரைவல்ரியாக இருந்ததாக கூறிய விராட் கோலி, இப்போது ஆரோக்கியமான போட்டியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா ரசிகர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பார்டர் கவாஸ்கர் கோப்பை மீது ஆஸ்திரேலியா அணி கைவைக்க முடியவில்லை.

கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதனால் இம்முறை பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் முழுக்க முழுக்க இந்திய டெஸ்ட் தொடரை மனதில் வைத்து பயிற்சியை தீவிரப்படுத்தி வருகிறார்.
இன்னொரு பக்கம் ஹேசல்வுட் இந்திய அணியின் இளம் வீரர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து விராட் கோலி பேசுகையில், ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடும் போது ரைவல்ரி கூடுதல் அழுத்தத்துடன் இருக்கும். அந்த சூழலே கொஞ்சம் பரபரப்பாகவும், பதற்றமாகவும் அமையும்.
ஆனால் கடந்த இரண்டு முறையும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், ரைவல்ரி இப்போது மரியாதையாக மாறியுள்ளது. இந்திய அணியை யாரும் சாதாரணமாக எடுத்து கொள்வதில்லை. ஒரு அணியாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் போது, ரசிகர்கள் எங்கள் மீது வைத்துள்ள மரியாதையை பார்க்க முடிகிறது.
அதற்கு தொடர்ச்சியாக இரு முறை ஆஸ்திரேலியா மண்ணில் கோப்பையை வென்றதே காரணம் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்கள் உட்பட 1,352 ரன்களை விளாசி இருக்கிறார். ஏற்கனவே 4 முறை ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளதால், இம்முறை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அஸ்வின் பேசுகையில், இந்திய அணி வீரர்களிடம் திறமை இருக்கிறது என்பது ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நன்றாக தெரியும். அதேபோல் இந்திய அணி மீதான மரியாதையும் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி எவ்வளவு சிறந்த அணி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். இரு அணிகளுக்கு இடையில் நல்ல மரியாதையும், போட்டி போடும் குணமும் தீவிரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.