
பேட்டிங் வரிசை
முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்ததாக கூற முடியாது. ராகுல், சாம்சன் மற்றும் ஜடேஜா மட்டுமே பெரும்பாலான ரன்களை அடித்தனர். அதிலும் ஜடேஜா கடைசி இரு ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடாமல் போயிருந்தால் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும்.

சிறப்பான பினிஷிங்
ஜடேஜா இந்திய அணியின் புதிய பினிஷராக மாறி வருகிறார். தோனியின் இடத்தை நிரப்பப் போவது யார்? என்ற கேள்விக்கு விடையாக அவர் மாறி இருக்கிறார். அவர் ஆல்-ரவுண்டராகவும் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்.

ஜடேஜா காயம்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக முதல் டி20 போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் அடுத்த இரு டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாற்று வீரர் யார்?
ஆனால் போட்டியில் ஷர்துல் தாக்குர் ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இறங்குவது சந்தேகமே. சாஹல் தான் ஜடேஜாவுக்கு பதில் சுழற் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெறுவார். அப்படி நடந்தால் இந்திய அணி ஒரு ஆல்-ரவுண்டரை இழக்கும்.

சிக்கலில் பேட்டிங்
ஜடேஜா ஒரு முழு நேர பேட்ஸ்மேன் போலவே ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் செயல்பட்டார். வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோர் ஓரளவு பேட்டிங் செய்தாலும் ஜடேஜாவின் சமீபத்திய பார்முக்கு இணையாக அவர்களால் ஆட முடியாது.

என்ன செய்யப் போகிறார் கோலி?
இந்த நிலையில், இந்திய அணியில் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள சறுக்கலை கேப்டன் கோலி எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வேறு ஆல் - ரவுண்டர்கள் யாரும் ஜடேஜாவுக்கு மாற்றாக ஆட வைக்கக் கூடிய நிலையில் இல்லை.


Click it and Unblock the Notifications