பிரிஸ்பேன்: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான கேஎல் ராகுல் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளை எதிர்கொண்ட விதம், முன்னாள் வீரர் முரளி விஜயை நினைவுபடுத்தியதாக பாராட்டியுள்ளார். 4வது நாள் ஆட்டத்தில் முதல் பந்தை தவிர்த்து கேஎல் ராகுல் அற்புதமான ஷாட்களை ஆடியதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்காக இந்திய அணி போராடி வருகிறது. 4வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்ததோடு, கூடுதலாக 6 ரன்களை எடுத்து அசத்தியுள்ளது. இதனால் 5வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களுடன் தொடங்கவுள்ளது.

44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஃபாலோ ஆன் கொடுத்து வீழ்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் திட்டத்திற்கு இந்திய அணியின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் முடிவுரை எழுதியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தான். சிறப்பாக ஆடிய அவர் 139 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 84 ரன்களை விளாசினார்.
அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக களமிறங்கி சுமார் 43 ஓவர்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார். ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அபாரமாக களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததற்கு கேஎல் ராகுலின் நிதான ஆட்டமே காரணமாக அமைந்தது. ஏனென்றால் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் கேஎல் ராகுல் கொஞ்சம் கூட அசராமல் பந்தை சரியாக கணித்து விக்கெட் கீப்பரிடம் விட்டுக் கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் பாடி லைனில் வரும் பந்துகளை எதிர்கொள்ள க்ரீஸை சிறப்பாக பயன்படுத்தி கால்களை நகர்த்தினார். இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், 4வது நாள் ஆட்டத்தின் முதல் பந்தை மட்டும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை.
அந்த பந்தை தேவையின்றி ஃபாலோ செய்து ஸ்லிப்பில் கேட்சை கொடுத்தார். ஆனால் அந்த பந்தை தவிர்த்து மற்ற அனைத்து பந்துகளையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். குறிப்பாக ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளை கேஎல் ராகுல் ஆடிய விதம் அபாரமாக இருந்தது. ஆஃப் ஸ்டம்பிற்கு அருகில் சென்ற பந்துகளையும் கூட கேஎல் ராகுல் மிகத் தெளிவாக லீவ் செய்தார். அவரின் ஆட்டம் லபுஷேனின் 2வது நாள் ஆட்டத்தை நினைவுபடுத்தியது.
இதற்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களில் முரளி விஜய் மட்டுமே ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை சிறப்பாக கணித்து விளையாடியவர். கேஎல் ராகுலின் இந்த இன்னிங்ஸ் முரளி விஜயை நினைவுபடுத்தியது என்று பாராட்டியுள்ளார். இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் முதலிடத்தில் உள்ளார்.