சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு முறை 'டக் அவுட்' ஆகி, கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் விராட் கோலிக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் ஆதரவுக் கரம் நீட்டி, ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார். "ஒற்றை ரன்னுக்காக விரக்தி அடைந்து, உங்கள் இயல்பான ஆட்டத்தை இழக்காதீர்கள்" என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் எட்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன கோலி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இது பற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், கோலியின் ஆட்டமிழந்த விதம் குறித்துத் தனது கருத்தை முன்வைத்தார்.
"விராட் கோலி, இரண்டு போட்டிகளில் இரண்டு டக் அவுட்கள்... இதை நாம் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அடிலெய்டு போட்டியில், அவர் தனது ஃபேவரிட் ஃபிளிக் ஷாட்டை ஆட முயற்சித்தார். ஆனால், பந்து உள்ளே வந்தபோது, பேட்டிற்கும் பேடிற்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளியை அவரிடம் நான் பார்த்ததே இல்லை" என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

கோலி இந்தச் சரிவிலிருந்து மீள்வதற்கான வழியையும் பதான் கூறினார்: "விராட் கோலி எப்படி இதிலிருந்து மீண்டு வர முடியும்? நிச்சயம் அவர் ஒரு சிங்கிள் எடுத்து, ரன் கணக்கைத் தொடங்கவே விரும்புவார். ஆனால், அந்த ஒற்றை ரன்னுக்காக அவர் விரக்தி அடையக் கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். அந்த ஒரு ரன்னை எடுக்க வேண்டும் என்ற ஆசையில், அவர் தனது பேட்டிங்கை ரசித்து விளையாடுவதை நிறுத்திவிடக் கூடாது. அவர் தனது ஆட்டத்தை ரசித்து விளையாடினால், அவரால் அதிக நேரம் களத்தில் நிற்க முடியும். ரன்கள் வரத் தொடங்கிவிட்டால், அதன்பிறகு அவர் திரும்பிப் பார்க்க மாட்டார். ஒருநாள் கிரிக்கெட் அவருக்குப் பிடித்தமான வடிவம்" என்று பதான் நம்பிக்கை தெரிவித்தார்.
ரசிகர்களுக்கும் பதான் ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்தார். "ரோஹித், கோலி போன்ற வீரர்கள் இன்னும் ஒன்று, இரண்டு வருடங்கள் விளையாடினாலும், உலகக் கோப்பையில் ஆடினாலும், ஆடாமல் போனாலும் சரி... அவர்கள் எவ்வளவு காலம் விளையாடினாலும், இந்த ஜாம்பவான்களின் ஆட்டத்தை ரசிக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால், அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்" என்றார்.
மறுமுனையில், மந்தமாக ஆடினாலும் 73 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவின் ஆட்டத்தையும் பதான் பாராட்டினார். "ரோஹித் போராடினாலும், இந்த இன்னிங்ஸ் அவருக்கு மற்ற எதையும் விட அதிக மனநிறைவைக் கொடுத்திருக்கும். அந்தப் போராட்டத்திற்கு அவர் தயாராக இருந்தார்" என்று குறிப்பிட்டார்.
இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுவிட்ட நிலையில், சிட்னியில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டியில் விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுத்து, விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.