ராய்பூர் : இந்திய அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயருக்காக ஆஸ்திரேலிய டி20 தொடரில் நன்றாக ஆடி வரும் இரண்டு வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி ராய்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் மூன்று போட்டிகளின் போது ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்தப் போட்டிக்கு முன்னதாக அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரை போட்டியில் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. ஆனால், அவருக்காக அணியில் இரண்டு மாற்றங்களை செய்ய உள்ளது தான் சரியா என்ற விவாதத்தை கிளப்பி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரை மூன்றாம் வரிசையில் தான் பேட்டிங் ஆட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், அவருக்கு அந்த இடத்தில் கடந்த மூன்று போட்டிகளில் ஆடி வரும் இஷான் கிஷனை நீக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.
அவர் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து இருந்தார். ஆனாலும், அவரை நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விக்கெட் கீப்பர் என்பதால் இஷான் கிஷனை நீக்கினால், மாற்று விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க வேண்டும். அதனால், ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட உள்ளார்.
இப்படி இரண்டு மாற்றங்களை செய்வதற்கு பதிலாக இஷான் கிஷனை ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். இந்த மாற்றம் தவிர பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
பிரசித் கிருஷ்ணா தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முகேஷ் குமார் அணிக்கு திரும்பி இருப்பதால் மூன்றாவது போட்டியில் மட்டும் ஆடிய ஆவேஷ் கான் நீக்கப்படுவார்.