ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ரா ஓவரில் 18 ரன்கள் விளாசிய கோன்ஸ்டாஸ் விக்கெட்டை தற்போது 2வது இன்னிங்சில் பும்ரா சொல்லி அடித்து எடுத்திருக்கிறார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது.
இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாஸ் அபாரமாக விளையாடினார். பும்ரா ஓவரில் சிக்சர் எல்லாம் அடித்தார். ஒரே ஒரே ஓவரில் 18 ரன்கள் குவித்த கோன்ஸ்டாஸ், பும்ராவை வம்பிழுக்கும் வகையில் அவர் மீண்டும் பந்து வீச வருவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கேலி செய்தார்.

இந்த நிலையில் 369 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆட்டம் இழந்தது. ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 358 என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி கூடுதலாக 11 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அபாரமாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 114 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது. முதல் இன்னிங்ஸில் ஓவராக வாய் பேசிய சாம் கோன்ஸ்டாஸ்க்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இந்திய வீரர்கள் பந்து வீசினர். முதலில் ஆகாஷ் தீப் அதிவேகமாக வீசிய பந்தை ஷாம் கோன்ஸ்டாஸ் அடித்த போது அவருடைய கையில் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ஷாம் கோன்ஸ்டாஸ், பும்ரா பந்துவீச்சில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது போல்ட் ஆகி வெளியேறினார்.
அப்போது கோன்ஸ்டாஸ் முதல் இன்னிங்சில் கோலி அவுட் ஆன பிறகு ரசிகர்களை பார்த்து கத்துங்கள் கத்துங்கள் என்று எவ்வாறு செய்தாரோ, அதே போல் பும்ரா மீண்டும் செய்து கத்துங்கள் கத்துங்கள் என ரசிகர்களை பார்த்து சைகை செய்து பதிலடி கொடுத்தார். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோன்ஸ்டாஸ் பேசிய பேச்சுக்கு தற்போது பும்ராவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்கள் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.