ரோகித் சர்மாவின் பேட்டிங் வரிசை என்ன? கேஎல் ராகுல் சொன்ன கலகல பதில்.. பிங்க் பால் குறித்தும் பேச்சு
அடிலெய்ட் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் அடிலெய்ட் நகரில் முகாமிட்டு தீவிரப் பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ரோகித் சர்மா, கில் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்ப இருக்கிறார்கள். இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாறுபடும் என தெரிகிறது. ஏனென்றால் முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்து சாதனை படைத்தனர்.

இதனால் இந்த ஜோடியை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இதன் காரணமாக ரோகித் சர்மா எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கே எல் ராகுலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல், நான் எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறேன்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை என்ன என்று என்னிடம் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. ஆனால் செய்தியாளர்களிடம் அதை சொல்லக்கூடாது என்று எனக்கு உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அதனால் நான் அதை சொல்ல மாட்டேன் என்று கூறினார்.இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. நான் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறேன் என்று எனக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே தெரியும்.
இதற்காக நான் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். தொடக்க வீரராக களம் இறங்கும் போது 20 ஓவர்கள் வரை பந்தை எதிர்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் விளையாட வேண்டும். முதலில் புதிய பந்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளித்து, அதன் பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும். பல பந்துகளை விட வேண்டும்.
நிலைத்து நின்று ஆடுவதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். இதற்கான பயிற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடிய அனுபவம் இருந்தது எனக்கு கை கொடுத்தது. இதை போன்று இந்திய ஏ அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் நான் தொடக்க வீரராக களம் இறங்கியதும் எனக்கு உதவிகரமாக அமைந்தது.
நாளை கேப்டன் ரோகித் சர்மா உங்களை வந்து சந்திப்பார். அப்போது உங்களின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். என்னை பொருத்தவரையில் பேட்டிங் வரிசையில் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு நான் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். என் அணிக்காக நான் விளையாடி வெற்றி பெற வைக்க வேண்டும்.
என்னுடைய விளையாட்டு என்பது மிகவும் சிம்பிள் தான். பெரிய அளவில் குழப்பி கொள்ள மாட்டேன். நான் பேட்டிங் வரிசையில் பல இடங்களில் இறங்கி விளையாடி இருக்கின்றேன். இது என்னுடைய முதல் பிங்பால் டெஸ்ட் என்பதால் எனக்கு அனுபவம் கிடையாது. இதற்கு முன்பு விளையாடிய வீரர்களிடம் கேட்டு எப்படி பந்தை எதிர்கொள்ள வேண்டும் என தெரிந்து கொண்டு உள்ளேன் என்று கே எல் ராகுல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications