இந்த ஆட்டம் போதுமா தம்பி.. தனியாளாக வேடிக்கை காட்டிய கேஎல் ராகுல்.. ஆடிப்போன ஆஸ்திரேலியா வீரர்கள்!
லக்னோ: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 412 ரன்களை சேஸிங் செய்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அனுபவ வீரர் கேஎல் ராகுல் அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 210 பந்துகளில் 4 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 176 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து அசத்தி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரரான கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். அதிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 532 ரன்களை விளாசினார். இதன் மூலமாக இந்திய அணியின் தொடக்க வீரர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு கேஎல் ராகுலுக்கு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்தார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பாக கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தன. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக ஆடிய போதும், கேஎல் ராகுல் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் துருவ் ஜுரெல் தலைமையின் கீழ் விளையாடினார். அதற்கேற்ப தனது அனுபவத்தின் மூலமாக 2வது இன்னிங்ஸில் 412 ரன்கள் என்ற பிரம்மாண்ட சேஸிங்கை தொடக்கம் முதல் களத்தில் இருந்து செய்து சாதித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 420 ரன்கள் சேர்க்க, இந்திய ஏ அணியோ முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 226 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, 2வது இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு 412 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் கொஞ்சம் கூட அசரவில்லை. கடைசி வரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 210 பந்துகளில் 4 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 176 ரன்கள் எடுத்து அசத்தினார். இவருக்கு உறுதுணையாக சாய் சுதர்சன் 172 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலமாக கேஎல் ராகுல் அபாரமான ஃபார்மில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் அசத்தலாக விளையாடும் பட்சத்தில், மீண்டும் அவரைத் தேடி துணைக் கேப்டன் பதவி வரும் என்றும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications