பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் பொங்கி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற முயற்சி செய்தது. ஆனால், இந்தியா முதலில் பேட்டிங் 160 ரன்கள் குவித்து, பின் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்த போது கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸாக மேத்யூ வேட் தலைக்கு நேராக, உயரமாக வந்தது. அதனால், அந்த பந்தை வைடு என அறிவிக்குமாறு கேட்டார் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட். ஆனால், அம்பயர் வைடு தர மறுத்து விட்டார்.

அதே ஓவரின் ஐந்தாவது பந்தை ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் நேராக அடித்த போது அம்பயர் தன் மீது பட்டு விடுமோ என எண்ணி நகர்ந்தார். பந்து சரியாக அவர் மீது பட்டு கீழே விழுந்தது. ஆஸ்திரேலியா பவுண்டரி அல்லது சில சிங்கிள் ரன்கள் எடுக்கும் வாய்ப்பை அதனால் இழந்தது.
நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த போதே இந்த இரண்டு சம்பவத்தையும் குறிப்பிட்டு பொங்கி எழுந்தார் மேத்யூ ஹெய்டன். அவர் வர்ணனையில் அந்த வைடு குறித்து கூறுகையில், "அது நிச்சயம் வைடு தான். மேத்யூ வேட் தலைக்கு மேலே பந்து செல்கிறது. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். அவர் நின்று கொண்டு இருக்கிறார். அப்போதும் பந்து அவர் தலைக்கு மேலே செல்கிறது" என்றார்.
அடுத்து அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக கருதிய ஹெய்டன் அது குறித்து பேசுகையில், "இதே ஓவரில் அம்பயர் இரண்டாவது முறையாக தன் வேலையை செய்து இருக்கிறார். இதைப் பாருங்கள். இந்த முறை பந்து நேராக சென்றது. அவர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்" என்றார்.
இது குறித்து ரசிகர்கள் மத்தியில் இரு வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கிரிக்கெட்டில் இது எல்லா அணிகளுக்கும் நடக்கும் விஷயம் தான் எனக் கூறி வருகின்றனர். சிலர் பந்து அம்பயர் மீது பட்டு நின்றதால், அந்த பந்தை "டெட் பால்" என அறிவித்து மீண்டும் பந்து வீசச் செய்து இருக்கலாம் என கூறுகின்றனர்.