மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. ஓராண்டுக்கு பின் கிரிக்கெட் களம் திரும்பியுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் அளவிற்கு இன்னும் ஃபிட்னஸை எட்டவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை குவித்துள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால் 3வது வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ஏனென்றால் 16 ஓவர்களை வீசிய ஹர்சித் ராணா 86 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதுமட்டுமல்லாமல் 2 மெய்டன் ஓவர்களை மட்டுமே வீசி இருக்கிறார்.
இவரின் எகனாமி 5.70ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததே, ஆஸ்திரேலியா அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை பவுலர்களுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும், கட்டுக்கோப்புடன் பந்துவீச அறிந்திருக்க வேண்டும். ஆனால் ஹர்சித் ராணா கொஞ்சம் கூட சவால் அளிக்காமல் சரணடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஓவர்கள் வீச வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அனுபவ வீரரான முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று பேச தொடங்கினர். சில நாட்களுக்கு முன்பாக 4வது டெஸ்ட் போட்டிக்கு முன் முகமது ஷமி இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இணைவார் என்று கூறப்பட்டது.
இதற்காக தான் சையத் முஷ்டாக் அலி தொடரில் முகமது ஷமியை கண்காணிக்க என்சிஏ தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப முகமது ஷமியும் சையத் முஷ்டாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் அளவிற்கு முகமது ஷமி உடல் தகுதியை எட்டிவிட்டாரா என்ற கேள்வி இருந்தது.
இந்த நிலையில் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடும் அளவிற்கு முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. இன்னும் என்சிஏவிடம் இருந்து ஃபிட்னஸ் சான்றிதழை முகமது ஷமி வாங்கவில்லை என்பதால், அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.