மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முகமது ஷமி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
குல்தீப் யாதவ் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று முதல் டெஸ்ட்டில் விளையாடினார். ஆனால், திடீரென ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அது பற்றி பிசிசிஐ விளக்கம் அளித்து இருக்கிறது.

குல்தீப் யாதவுக்கு நீண்ட காலமாகவே இடது இடுப்பு பகுதியில் வலி இருந்து வருவதாகவும், அதற்கான தீர்வு வேண்டும் என்பதால் அவர் பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குல்தீப் யாதவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
முகமது ஷமியை ஏன் தேர்வு செய்யவில்லை? என்பது பற்றி பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும், அவர் தனது முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு மீண்டும் லேசான வீக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அது பற்றி கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்தார். எனவே, முழு உடற் தகுதி பெறாத முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்ற நிலையில் பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை.
அதே சமயம் ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதால் இந்திய அணியில் ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் 18 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். முகேஷ் குமார் நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகிய மூவரும் ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.