அடுத்த முகமது ஷமி இவர்தான்.. இளம் வீரரை அடையாளம் காட்டிய அஸ்வின்.. அதே டெக்னிக் அதே பவுலிங்
திருவனந்தபுரம் : இந்திய அணியில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் முகேஷ் குமார் தான் அடுத்த முகமது ஷமி என கூறி இருக்கிறார் அஸ்வின்.

கடந்த ஐந்து - ஆறு ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியாக இந்திய அணி வலம் வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெறக் கூடும்.
வேகப் பந்துவீச்சாளர்கள் என்பதால் அதிக அளவில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த தலைமுறை வேகப் பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. அதன் காரணமாக இந்திய டி20 அணியில் பல புதிய வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் முகேஷ் குமார்.
இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள், ஆறு டி20 போட்டிகளில் முகேஷ் குமார் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதிலும் கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 225 ரன்கள் குவிக்க நினைத்த ஆஸ்திரேலிய அணியை 208 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார் முகேஷ் குமார்.
அவரது சிறப்பான பவுலிங் குறித்து பேசிய அஸ்வின் அவர் தான் அடுத்த முகமது ஷமி என கூறினார். "நான் முதலில் சிராஜ் தான் அடுத்த ஷமியாக வருவார் என நினைத்தேன். ஆனால், இப்போது முகேஷ் குமார் தான் அந்த இடத்தை பிடிப்பார் என நினைக்கிறேன். முகேஷ் குமாரும் ஷமியைப் போன்ற உடல்வாகு கொண்டு இருக்கிறார். அதே உயரம், அதே மாதிரியான அற்புதமான ரிஸ்ட் பொசிஷன் (Wrist position) கொண்டு இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் நன்றாக பந்து வீசினார். பார்படோஸில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் அவர் அபாரமாக பந்து வீசினார்." என்றார் அஸ்வின்.


Click it and Unblock the Notifications