மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது. 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போது, 3வது நாளின் முதல் செஷனிலேயே இந்திய அணியை ஆல் அவுட் செய்யும் எண்ணத்துடன் ஆஸ்திரேலியா அணி பவுலர்கள் தீவிரமாக இருந்தனர்.
அதற்கேற்ப சீனியர் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் விரைவாக நடையை கட்டினார். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரும் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளார். சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் களத்தில் மொத்தமாக 196 நிமிடங்கள் போராடி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை அளித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் தொடர்ந்து ஒன்றை எங்களுக்கு சொல்லுவார்கள். அது என்னவென்றால், என்ன நடந்தாலும் கடைசி வரை போராட வேண்டும் என்று கூறுவார்கள்.
அந்த வார்த்தைகள் எங்களுக்குள் பதிந்துவிட்டதாக நினைக்கிறேன். இந்திய அணிக்காக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடுவது பெருமையாக உள்ளது. அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசியது மகிழ்ச்சியாக உள்ளது. அவரின் இன்னிங்ஸ் பல ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும். கவுதம் கம்பீர் மற்றும் இதர பயிற்சியாளர்கள் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் நம்பிக்கை எனக்கு கூடுதல் மன உறுதியை அளிப்பதாக நினைக்கிறேன். அதுதான் இந்திய அணிக்காக ஸ்பெஷல் இன்னிங்ஸை விளையாட வைக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இன்னும் கூடுதலாக ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்றைய ஆட்டம் எங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் போது பல்வேறு சவால்கள் முன் வரும்.
அந்த சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். முதல் 20 பந்துகளில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதன்பின் ரன்கள் வர தொடங்கியதால், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டி மனதளவில் மிகவும் வலிமையான வீரர் என்பது எனக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளாகவே அவரை எனக்கு நன்றாக தெரியும்.
இன்றைய இன்னிங்ஸை பார்க்கும் போது வியப்பாகவும் உள்ளது. அதேபோல் அவர் தான் சில பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். பாக்ஸிங் டே டெஸ்ட் வரலாற்றில், இந்த சதம் நிச்சயம் நீண்ட நாட்களுக்கு பேசப்படும். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி நல்ல நிலையில் இருப்பதாக கருதுகிறேன். நிதிஷ் குமார் ரெட்டி என்ன செய்தாலும் 120 சதவிகிதம் உழைப்பை கொடுப்பவர்.
ஐபிஎல் தொடரின் போது அவரின் பயிற்சியை கண்டிருக்கிறேன். அப்போது ஸ்பெஷலான வீரர் என்பது அனைவருக்கும் புரிந்தது. வரும் காலங்களிலும் பல சதங்களை விளாசி புஷ்பா ஸ்டைலில் கொண்டாடுவார் என்று நம்புகிறேன். மேலும், இந்த பிட்சில் பவுலர்களுக்கும் சில உதவிகள் உள்ளது. இன்றைய நாளில் இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை மனதில் வைத்து செயல்பட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒவ்வொரு செஷனும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.