மும்பை : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு குறுக்கே பும்ரா மட்டும்தான் நிற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கின்றார்.
முதல் டெஸ்டில் கேப்டனாக அபாரமாக பந்து வீசிய பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் பாராட்டி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல் பல ஜாம்பவான்களின் கலவையாகும் இருப்பதாக பாராட்டி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பல திறமை வாய்ந்த ஜாம்பவான்களின் திறமை கலந்த கலவையாக பும்ரா இருக்கின்றார். மால்கம் மார்ஷல் களத்தின் சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றிக் கொள்வார். அந்த திறமை பும்ராவிடம் இருக்கின்றது. இதைப் போன்று ஆஸ்திரேலியா வீரர் டெனீஸ் லில்லி ஆக்ரோஷமாக இருப்பார். அதுவும் பும்ராவிடம் இருக்கின்றது.
நியூசிலாந்து அணியின் ரிச்சர்ட் ஹாட்லி பந்தை நன்றாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பார். இதைப் போன்று ஆண்ட்டி ராபர்ட் யுக்திகளை வகுத்து பந்து வீசுவார். வசீம் அக்ரம், வக்கார் யூனிசும் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர்கள். இது அனைத்துமே தற்போது பும்ராவிடம் கலவையாக இருக்கின்றது.பும்ராவை பாராட்டும் போது நாசர் ஹூசைன் சரியாக சொல்லியிருக்கிறார்.
பும்ரா ஒரு முழுமை பெற்ற பவுலராக இருக்கின்றார் என்று அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. பும்ராவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அப்படி அவர் விளையாடினால் அனைத்து சாம்பியன்களுக்கும் மேலான வீரராக பும்ரா விளங்குவார்.
பும்ரா தனக்கென ஒரு சரித்திரத்தை எழுதி வருகிறார். பும்ராவின் யாக்கர்களை கண்டு எதிர்கால வேகப்பந்துவீச்சாளர்கள் ஊக்கம் பெறுவார்கள். நான் டெனீஸ் லில்லியை அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன். அவர் ஒரு போராளி. ஆக்ரோஷமாகவும் களத்தில் செயல்படுவார். பேட்ஸ்மேன்களின் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருக்கின்றார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் டெனீஸ் லில்லிக்கு எதிராக நான் விளையாடி இருக்கின்றேன். அவருடைய பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். தற்போது அதேபோல்தான் பும்ராகவும் விளங்குகிறார். ரிச்சர்ட் ஹார்ட்லி எப்படி நியூசிலாந்து வேகப்பந்துவீச்சை தனது தோளில் சுமந்து செயல்பட்டாரோ, அதேபோல் பும்ராவும் தனது தோளில் இந்திய கிரிக்கெட்டின் பந்துவீச்சை சுமக்கின்றார். ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வதற்கு பும்ரா மட்டும்தான் தடையாக இருக்கிறார் என்று கிரேக் சேப்பல் பாராட்டிருக்கிறார்.