மும்பை : 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் தான். பார்டர் கவாஸ்கர் கோப்பையை கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணி வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் ஹாட்ரிக் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெறும் உத்வேகத்தில் களமிறங்குகிறது.

இதனை தடுத்து இழந்த பெருமையை சொந்த மண்ணில் மீட்க வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் எந்த தொடரிலும் பங்கேற்காமல் ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது என்றாலே களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் களத்தில் வம்பிழுப்பது போட்டியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும். அந்த வகையில் விராட் கோலி எப்போதுமே ஆஸ்திரேலியா வீரர்களை களத்தில் வம்பி இழுத்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார். ஒரு காலத்தில் நல்ல பிள்ளைகள் போல் இருந்த இந்திய அணி, விராட் கோலி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு பேட் பாய்ஸ் ஆக மாறிவிட்டார்கள்.
ஆனால் விராட் கோலி விட ரிஷப் பண்ட் தான், எங்களை அதிகமாக வம்பு இழுப்பார் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம், உங்களிடம் யார் அதிகமாக களத்தில் ஸ்லெட்ஜிங் செய்வது யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்டார்க், ஹேசல்வுட், லயான், கவாஜா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் அனைவரும் ரிஷப் பண்ட் தான் அதிகமாக களத்தில் எங்களிடம் வாய் பேசுவார் என்று கூறி இருக்கின்றனர்.கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பண்டின் ஆட்டம் தான்.அதுமட்டுமல்லாமல் பண்ட் விக்கெட் கீப்பிங் நிற்கும்போது தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வருவார்.
ஒருமுறை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆக இருந்த டிம் பெயின், தனது குழந்தையை வந்து பார்த்துக் கொள்ளுமாறு பண்டிடம் கூறினார். இதனை தொடர்ந்து பண்ட், உண்மையிலே டிம் பெயினின் குழந்தையை பார்த்துக் கொள்வது போல் ஒரு புகைப்படத்தை எடுத்தார். அதனை டிம் பெயனின் மனைவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.