சிட்னி: ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவை கிண்டல் செய்து வெளியிட்டுள்ள ஒரு விளம்பர வீடியோ, இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்குரிய கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, அருவருப்பான சைகைகளை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பது, இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், வரும் அக்டோபர் 19 அன்று பெர்த்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் 'காயோ ஸ்போர்ட்ஸ்' (Kayo Sports) என்ற ஓடிடி தளம், ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை கிண்டல் செய்யும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது.

அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.
அப்போதுதான், விளையாட்டுக்கே அவமானம் சேர்க்கும் அந்த அருவருப்பான செயல்கள் அரங்கேறின. சோஃபி மோலினக்ஸின் மோசமான சைகை: ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான, அவமானகரமான சைகையாகும்.
மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்து, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
ஒரு ரசிகர், "உண்மையைச் சொல்லுங்கள், ஆஸ்திரேலியா விளையாடும் போட்டியை யார் விரும்பிப் பார்க்கிறார்கள்? எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சர்ச்சை (சாண்ட்பேப்பர், அண்டர் ஆர்ம் பந்துவீச்சு) அல்லது எதிரணிக்கு அவமரியாதைதான்" என்று கடுமையாகச் சாடினார்.
மற்றொருவர், "இதுதான் ஆஸ்திரேலியர்களின் குணம்; அவர்களிடம் இருக்கும் திமிரான மனநிலையை இது காட்டுகிறது," என்று பதிவிட்டார். இன்னொரு ரசிகர் "விளையாட்டுத் திறனுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எண்ணெய் மற்றும் தண்ணீரைப் போல... அவை ஒருபோதும் சேராது" என்று குறிப்பிட்டார்.
இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை தனது டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் (X) ஆகிய அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.
இந்தச் சம்பவம், வரவிருக்கும் இந்தியா - ஆஸ்திரேேலியா தொடருக்கு முன்பே ஒரு கசப்பான சூழலை உருவாக்கியுள்ளது. களத்தில் பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இந்தச் சர்ச்சை, களத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இந்த அவமதிப்புக்கு இந்திய அணி களத்தில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.