மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து பெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரர் முகமது கைஃப்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா லீக் சுற்றில் 9 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அரை இறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அதன் பின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தின் பிட்ச்சை இந்திய அணி தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட பிட்ச் ஆலோசகர் ஆன்டி அட்கின்சன் அது குறித்து அனுப்பிய இமெயில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் பிட்ச்சை மொபைலில் படம் பிடித்ததும் விவாதமாக மாறியது. இரவோடு இரவாக பிட்ச்சை இந்திய அணி மாற்றி விடும் எனக் கருதியே அவர் படம் பிடித்ததாக பலரும் கூறினர்.
பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டதாக நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி உலகக்கோப்பையை வென்றது. தற்போது அந்த இறுதிப் போட்டி பிட்ச்சில் என்ன தான் நடந்தது என முகமது கைஃப் அதிர வைக்கும் தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இறுதிப் போட்டிக்கு முன் மூன்று நாட்களாக பிட்ச்சை தினமும் வந்து பார்த்ததாகவும், ஸ்லோ பிட்ச் தயார் செய்ய வேண்டும் என அவர்கள் முடிவு செய்து பிட்ச்சில் தண்ணீர் ஊற்றாமல் பார்த்துக் கொண்டதாகவும், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இதை சரியாக கண்டுபிடித்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததாகவும், ரோஹித் - டிராவிட் திட்டம் அவர்களுக்கே பாதகமாக முடிந்தது என கைஃப் கூறி இருக்கிறார்.
இது குறித்து முகமது கைஃப் அளித்த பேட்டி - "நான் அங்கே மூன்று நாட்களாக இருந்தேன். ரோஹித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் அந்த மூன்று நாட்களும், தினமும் வந்து பிட்ச்சை சோதித்தனர். ஒவ்வொரு நாளும் பிட்ச் அருகே ஒரு மணி நேரம் நின்று இருந்தனர். அந்த பிட்ச்சின் நிறம் மாறுவதை நான் கண்டேன். பிட்ச்சில் தண்ணீர் விடவில்லை. பிட்ச்சில் புற்களும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு ஸ்லோ பிட்ச் அளிக்க இந்தியா முடிவு செய்தது. மக்கள் இதை நம்பவில்லை என்றாலும் இதுதான் உண்மை."
"ஏன் இப்படி செய்தார்கள் என்றால் ஆஸ்திரேலியாவில் வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் இருக்கிறார்கள். எனவே, இந்தியா அவர்களுக்கு ஸ்லோ பிட்ச் அளித்தால் சரியாக பந்து வீச முடியாது என்பதே திட்டம். அதுதான் நாம் செய்த தவறு. பலரும் பிட்ச் தயாரிப்பவர்கள் தங்கள் வேலையை தாங்களே செய்தார்கள். வெளியில் இருந்து யாரும் அவர்களுக்கு எந்த உத்தரவும் போடவில்லை என்கிறார்கள். அது சுத்த முட்டாள்தனம்."
:நீங்கள் பிட்ச்சை சுற்றி வருகிறீர்கள் என்றால் இரண்டு வரிகள் சொன்னால் போதும். "தயவுசெய்து பிட்ச்சில் தண்ணீர் விடாதீர்கள். புற்களை குறையுங்கள்" இப்படி தான் இது நடக்கும். இதுதான் உண்மை. அவர்கள் அதை செய்து விடுவார்கள். நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் ஆடுகிறீர்கள். அதனால் நாம் கொஞ்சம் அதிகப்படியாக பிட்ச்சில் வேலை செய்து விட்டோம்"
"கம்மின்ஸ் சென்னையில் நடந்த போட்டியில் ஸ்லோ பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருப்பதை அவர் பார்த்து விட்டார். இறுதிப் போட்டியில் யாரும் முதலில் ஃபீல்டிங் செய்ய மாட்டார்கள். ஆனால், கம்மின்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தார். நாம் பிட்ச்சை மாற்றுவதில் சொதப்பி விட்டோம்." இவ்வாறு கூறி இருக்கிறார் முகமது கைஃப்.