மெல்போர்ன் : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் மோசமான ஒரு ஷாட்டை ஆடி 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த பொறுப்பற்ற ஆட்டத்திற்கு கவாஸ்கர் கடுப்பாகி அவரை முட்டாள் என்று கோபமாக திட்டினார்.
அது மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட், இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போகக்கூடாது என்றும் ஆஸ்திரேலியா அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் தான் அவர் செல்ல வேண்டும் என்று கவாஸ்கர் காட்டமாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கு ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் ஒன்றும் தாம் விளையாடும் அனைத்து இன்னிங்ஸ்களிலும் இப்படிப்பட்ட ஒரு ஷாட்டை அவர் முயற்சி செய்வது கிடையாது. இந்தத் தொடரில் அவர் ஆட்டம் இழந்த அனைத்து இன்னிங்ஸையும் பார்த்தாலே அவர் எதிர்கொள்ள முடியாத பந்தில் தான் தன்னுடைய விக்கெட்டை இழந்து இருக்கிறார் என்று தெரியும்.
அடிலெய்ட் டெஸ்டில் அவர் ஆட்டம் இழந்த பந்து உண்மையிலேயே நல்ல முறையில் வீசப்பட்டது. அந்த பந்தில் யாராலும் அதிரடியாக அடித்து ஆட முடியாது. இதேபோன்று ஸ்டார்க் அவருக்கு எதிராக நல்ல முறையில் பந்து வீசினார். அதிலும் அவர் கேட்ச் ஆனார். எனவே அனைவரும் அமைதியாக இருங்கள். யாரும் ரிஷப் பண்ட்க்கு எதிராக பொங்க வேண்டாம்.
ஏனென்றால் ரிஷப் பண்ட் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டை அவர் எளிதாக எதிரணிக்கு கொடுப்பது கிடையாது. ரிஷப் பண்ட் கடுமையாக உழைத்து வருகிறார். அவர் பேட்டிங் செய்யும்போது பவுண்டரி லைனில் ஃபில்டர்கள் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ரிஷப் பண்ட், தாம் ஒரு அதிரடி வீரர் என்ற பெயரை பெற்று விட்டதால் அவர் களத்திற்கு வந்து பவுண்டரி அடித்த உடனே ஃபில்டர்கள் மைதானம் முழுவதும் நிற்கவைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தான் கொஞ்சம் முதிர்ச்சியுடன் விளையாட வேண்டும். ஃபீல்டர்கள் நிறுத்தி வைக்கப்படும்போது சிங்கிள்ஸ் டபுள்ஸ் எடுத்து ரன்களை எடுங்கள். ரிஷப் பண்ட் விளையாடியது மிகப்பெரிய ரிஸ்க்கான ஷாட் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஃபில்டர்கள் அப்படி நிற்கவைக்கப்பட்ட போது அவர் அந்த ஷாட்டை முயற்சி செய்தார்.
எனினும் அது சரியாக பேட்டில் அவருக்கு படவில்லை. இந்த சூழலில் ரிஷப் பண்ட் தனக்குத்தானே நம்பி பேட்டிங் செய்ய வேண்டும். தற்போது உலக கிரிக்கெட்டில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை கவர்ந்து எடுத்து செல்ல ரிஷப் பண்ட் போல இரண்டு வீரர்கள் தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.