அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆகி இருக்கும் விராட் கோலிக்கு, இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இளம் வீரர்களின் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கடந்த கால சாதனைகளை வைத்து அணியில் நீடிக்க முடியாது என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திற்கு வெளியே விராட் கோலியின் குருவாக இருப்பவர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இவ்வாறு கடுமையாக பேசி இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்து, 'கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டம் உருவாகியுள்ளது. ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

பெர்த்தில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சிலும், அடிலெய்டில் சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சிலும் 'டக் அவுட்' ஆனார் கோலி. தனது 17 ஆண்டுகால நீண்ட ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில், அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தொடர் சரிவு, 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், கோலியுடன் நெருங்கிப் பணியாற்றியவருமான ரவி சாஸ்திரி, கோலியின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தியாவின் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2027 உலகக் கோப்பை என்பது கோலிக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. அவர் உடனடியாக தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
"வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியை எதிர்கொள்ளும்போது, இந்திய அணியில் விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ, வேறு யாராக இருந்தாலும், யாரும் ஓய்வெடுக்க முடியாது. மெத்தனமாக இருக்கவும் முடியாது" என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
கடந்த சில மாதங்களில் இந்திய கிரிக்கெட் தலைமுறை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அபிஷேக் சர்மா போன்ற இளம் அதிரடி வீரர்கள் ஒருநாள் அணியின் கதவைத் தட்டுகின்றனர். இதனால், கோலி போன்ற ஜாம்பவான்களுக்கும் இனி அணியில் இடம் உறுதி இல்லை என்பதை சாஸ்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கோலியின் ஆட்டமிழந்த விதம் குறித்தும் சாஸ்திரி பேசுகையில், "இன்றும் அவர் ஆட்டமிழந்துவிட்டார். அவரது கால்களின் நகர்வு சற்றுத் தயக்கத்துடன் இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை படைத்துள்ள அவர், இப்படி அடுத்தடுத்து இரண்டு டக் அவுட் ஆனது அவருக்கே பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும்" என்றார்.
கோலியின் உடற்தகுதி குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்றாலும், 36 வயதாகும் அவர், அணியில் நீடிக்க வேண்டுமானால் தனது பேட் மூலம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சனிக்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டி, விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. அதில் அவர் தனது பார்மை மீட்டெடுத்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.