சென்னை: இந்திய அணியால் தொடர்ந்து அவமானம் செய்யப்பட்டு வந்ததன் காரணமாக அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கலாம் என்று அவரின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரின் ஓய்வு முடிவு அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்த நிலையில், இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க குடும்பத்தினரும், ரசிகர்களும் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அஸ்வின் திடீரென ஓய்வை அறிவிப்பதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகின. அதில், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அஸ்வின் தொடக்கத்திலேயே விளையாட விரும்பவில்லை என்று தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் டிராபியின் 5 போட்டிகளில் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அஸ்வின் பயணித்துள்ளார்.
அந்த நிபந்தனையை கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவருமே மீறியதால், டென்ஷனான அஸ்வின் உடனடியாக ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வினின் தந்தை பேசுகையில், அஸ்வின் ஓய்வு பெறுவது எனக்கும் கடைசி நிமிடத்தில் தான் தெரிய வந்தது. அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை நானும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டேன்.
அதற்காக எனக்கு எந்த சோகமும் இல்லை. ஆனால் அஸ்வின் ஓய்வை அறிவித்தது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் சோகம் தான். அதற்காக என் மகனின் முடிவில் தான் தலையிடக் கூடாது. ஓய்வு அறிவிப்புக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று தெரியவில்லை. அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஆனால் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவரின் ஓய்வு முடிவு எமோஷனலானது. ஏனென்றால் கடந்த 14 முதல் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நீண்ட காலத்திற்கு அவமானத்தை தாங்கி கொண்டிருக்க முடியாது. அதனால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். சிறுவயதில் பயிற்சிக்காக பைக்கில் ஏற்றி சென்று மைதானத்தில் விடுவேன். அதனை கடந்து பெரிதாக கிரிக்கெட்டில் தலையிட்டதில்லை. ஆனால் படிப்பு, கிரிக்கெட் இரண்டிலும் அஸ்வினை கவனம் செலுத்த ஆதரவாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்.. அவரின் பேச்சை மன்னிக்கவும்.. அவர் செய்தியாளர்களிடம் பேசிய அனுபவம் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
