கவுஹாத்தி : அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இளம் வீரர் ரிங்கு சிங்கை சில ஓவர்கள் முன்பே நம்பி களமிறக்காமல் போனதே மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், ரிங்கு சிங் பேட்டிங் செய்து இருந்தால் இந்தியா வென்று இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்திய டி20 அணியின் தற்காலிக பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் ரிங்கு சிங்கை நம்பாமல், கடைசி 2 -3 ஓவர்களில் மட்டும் தான் பேட்டிங் செய்ய அனுப்புவேன் என பிடிவாதமாக இருந்ததால் இந்தியா குறைவாக ரன் குவித்து விட்டது என இந்தப் போட்டியின் தோல்விக்கு பின் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி கவுஹத்தியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 6 ரன்களும், இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்து 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது துவக்க வீரர் ருதுராஜ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அப்போது வரிசைப்படி ஐந்தாவது பேட்ஸ்மேன் திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்தார். அவர் அதிரடியாக ஆடாமல், ருதுராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடுவதில் தான் குறியாக இருந்தார். அதனால் அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். ருதுராஜ் கெயிக்வாட் அதிரடி ஆட்டம் ஆடி 1233 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 222 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடியும் வரை ருதுராஜ், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் போனதால் ஃபினிஷர் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய வரவில்லை.
ஒருவேளை திலக் வர்மாவுக்கு பதில் ரிங்கு சிங் 11வது ஓவரிலேயே களமிறங்கி இருந்தால் அவர் தன் அதிரடி ஆட்டத்தால் திலக் வர்மாவை கூடுதலாக ரன் சேர்த்து இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், விவிஎஸ் லக்ஷ்மன், ரிங்கு சிங் ஃபினிஷர், அவர் கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்வார் என உறுதியாக இருந்து அவரை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. ஒரு வேளை ரிங்கு சிங் 11வது ஓவரில் இருந்து பேட்டிங் செய்து இருந்தால் அவரால் நீண்ட நேரம் அதிரடி ஆட்டம் ஆட முடிகிறதா? என பரிசோதனையும் செய்து இருக்கலாம். அந்த வாய்ப்பும் நழுவிப் போனது.