மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா அணியால் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பந்து, அந்த அணிக்கு மானப் பிரச்சனையாகவே மாறியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் இப்போதே இந்திய அணியுடன் வார்த்தை விளையாட்டுகளை தொடங்கியுள்ளனர். இதற்கு கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி அடைந்த அசாத்திய வெற்றி தான் காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 2 அரைசதம் உட்பட 278 ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவின் கனவை பறித்துவிட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் பேசுகையில், ரிஷப் பண்ட் போன்ற வீரரிடம் ரன்கள் அடிக்கும் வலிமையும், வெற்றிக்கான பசியும் அதிகமாக உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ரிஷப் பண்ட் முக்கியமான வீரராக அமைந்தார். அவரை ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அதற்கு அவரின் இயல்பான பேட்டிங் முக்கியமான காரணம். நிச்சயமாக ரிஷப் பண்ட் பேட்டிங் புதிதாகவும், சர்ப்ரைஸாகவும் இருக்கிறது. அதேபோல் இம்முறை இந்தியாவின் அனுபவ வீரரான விராட் கோலி மீண்டும் தனது தடத்தை பதிக்க காத்திருக்கிறார். பேட்ஸ்மேனாக எனது பார்வையில், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சூழலுக்கு ஏற்ப எப்படி திட்டமிட்டு தகவமைத்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
கடந்த முறை வென்ற இந்திய அணியை பார்த்தோம் என்றால், அந்த அணியில் விராட் கோலியே இல்லை. அதில் காபா மைதானத்தில் இந்திய அணியின் இரண்டாம் கட்ட பவுலர்கள் தான் விளையாடினார்கள். இந்திய அணியிடம் இருந்து அப்படியான மன உறுதியை தான் எதிர்பார்க்கிறோம். நாம் ஏற்கனவே செய்திருக்கிறோம்.. இரண்டாவது முறை முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும் நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று களமிறங்கியது நிச்சயம் நம்பிக்கையை அளிக்கும் என்று தெரிவித்தார்.