மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் இறுதியில் துவங்க உள்ளது. அந்த முக்கியமான தொடருக்கு முன் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோத உள்ள இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த பயிற்சி போட்டிக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அதே தொடரில் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிராகவும், இந்தியா ஏ அணி மோத உள்ளது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா ஏ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்து உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்தியா ஏ அணியின் கேப்டன் பதவியை அளிக்கும் பிசிசிஐ ஏன் இந்திய அணியில் இடம் மறுத்து வருகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் மறுக்கப்பட்டு வந்தாலும் அவரது தலைமை பண்பை பிசிசிஐ அறிந்தே இருக்கிறது என்பதற்கு உதாரணமாக அவர் மீண்டும் பிசிசிஐ தேர்வு குழுவினரால் இந்தியா ஏ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2020 காலகட்டத்திலேயே ருதுராஜை அடுத்த கேப்டனாக்க முடிவு செய்தார் தோனி. அது குறித்த செய்திகள் வெளியான போது பலரும் ஒரு இந்திய அணியில் கூட ஆடாத இளம் வீரரை சிஎஸ்கே-வின் கேப்டனாக நியமிக்க போகிறாரா தோனி? என விமர்சனம் செய்தனர். ஆனால், தோனி அவரை பட்டை தீட்டி, படிப்படியாக நான்கு ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆக்கி இருக்கிறார்.
தோனியின் கணிப்பு சரி என்பதை அறிந்த பிசிசிஐ சிஎஸ்கேவுக்கு கேப்டன் ஆகும் முன்னதாகவே ருதுராஜை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு நியமித்தது. அவரது தலைமையில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அடுத்து துலீப் ட்ராபியில் அவர் இந்தியா சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அந்த அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளாக ஆடிய வீரர்கள் இடம் பெற்று இருந்த போதும் ருதுராஜை கேப்டனாக நியமித்து இருந்தது பிசிசிஐ. தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக மட்டுமின்றி இந்திய டெஸ்ட் அணிக்கு எதிராகவும், இந்தியா ஏ அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்திய அணியின் முக்கிய டெஸ்ட் வீரர்கள் அடங்கிய அணிக்கு எதிராக ருதுராஜ் அணி விளையாட உள்ளது. இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்கப்படாத போதும் அவர் தொடர்ந்து இரண்டாம் கட்ட இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு வருவதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தால் அவர் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தற்போது சுப்மன் கில்லை இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அவரை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த தேர்வாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.