சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி, சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரின் அபார ஆட்டத்தால் மாஸ் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா ஏ அணி பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அடுத்தடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்தியா ஏ அணி தரப்பில் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், அபிமன்யூ ஈஸ்வரன் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ஏ அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களம் புகுந்த சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 93 பந்துகளில் அரைசதத்தை எட்ட, மறுமுனையில் தேவ்தத் படிக்கலும் அரைசதம் விளாசினார். இதன்பின் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியின் கைகள் ஓங்கியது. இருவரும் ஆஸ்திரேலியா பவுலர்களை திண்டாட வைத்தனர்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. அதேபோல் 120 ரன்கள் முன்னிலையை பெற்றுள்ள நிலையில், 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியின் 2 வீரர்களும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.